ரஷ்யாவில் திடீர் கிளச்சியில் ஈடுபட்ட வாக்னர் என்ற தனியார் ராணுவம் திடீரென பின் வாங்குவதாக அறிவித்து உள்ளது. மாஸ்கோவைக் கைப்பற்றுவதற்காக ஆயுதங்களுடன் சென்று கொண்டிருந்த 25 ஆயிரம் வீரர்களின் பயணம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.
ரஷ்யாவின் நட்பு நாடான பெலராஸ் அதிபர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வாக்னர் ராணுவத்தின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜி இந்த முடிவை எடுத்து உள்ளார். அவர், ரத்தம் சிந்தும் அபாயம் இருப்பதால் பின்வாங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இதனால் ரஷ்யாவில் கடந்த இரு நாட்களாக நிலவிய பதற்றம் ஓரளவு குறைந்து இருக்கிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யா ஏற்படுத்தி இருந்த வாக்னர் என்ற தனியார் ராணுவம் நேற்று முன் தினம் ரஷ்யா மீதே போர் தொடுப்பதாக அறிவித்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது.
வாக்னர் குழுவின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜி, உக்ரைனில் தாங்கள் போரிட்டுக் கொண்டு இருந்த போது ரஷ்ய படைகள் நடத்திய வான் வழித் தாக்குதலில் தங்கள் படையைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் இறந்து விட்டதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்குப் பழி தீர்க்க மாஸ்கோ நகரை கைப்பற்றப் போவதாக அவர் மிரட்டல் விடுத்தார். உக்ரைன் உடன் போர் செய்வதற்குப் போதிய ஆயுதங்களைத் ரஷ்யா தரவில்லை என்பதும் அவரின் குற்றச்சாட்டாகும்.
உக்கரைன் நாட்டின் சில இடங்களைக் கைப்பற்றி அங்கு தங்கியிருந்த இந்த கூலிப்படை வீரர்கள் 25 ஆயிரம் பேரும் வெள்ளிக்கிழமை அங்கிருந்து வெளியேறி ரஷ்யாவிற்குள் நுழைந்து ரோஸ்டவ் என்ற நகரிலுள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றினார்கள்.
இதனை அடுத்து மாஸ்கோவை நோக்கி வாக்னர் படை முன்னேறுவதாக வெளியான தகவல் உலகம் முழுவதுமே சனிக்கிழமை பெரும் பரபரப்பை உருவாக்கியது. கடைசியாக கிடைத் தகவலின்படி இவர்கள் மாஸ்கோவிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் முகாமிட்டு இருந்தனர். இதை எதிர்கொள்ளும் வகையில், மாஸ்கோவில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மாஸ்கோவுக்கு வரும் சாலைகள், தடுப்புகள் ஏற்படுத்தி மூடப்பட்டன.
அதிபர் விளாடிமிர் புடின் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், வாக்னர் குழு முதுகில் குத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக திரும்பி உள்ள அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்,
பெலாரஸ் அதிபர் லுகாஷெனுகோ உடனடியாக கூலிப்படை தலைவவர் பிரிகோஜின் உடன் பேச்சுவாத்தை நடத்தினார். இதில் உடன் பாடு ஏற்பட்டதால் வாக்னர்ராணுவத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் பிரிகோஜிக்கு என்ன உத்தரவாதம் தரப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகவில்லை.
இருப்பினும் இனியும் ரஷ்யாவில் இருப்பது ஆபத்து என்பதால் பிரிகோஜி அங்கிருந்து வெளியேற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தப்பிச் சென்று விட்டால் வாக்னர் படையி்ல் இருக்கும் 25 ஆயிரம் வீரர்களின் நிலைமை என்னவாகும் என்பதும் தெரியவில்லை.
பிரிகோஜி, மாஸ்கோவில் புடின் வசிக்கும் கிரம்ளின் மாளிகையில் சமையல்காரராக இருந்தார். அப்போது ஏற்பட்ட தொடா்புகளைப் பயன்படுத்தி வாக்னர் என்ற பெயரில் துணை ராணுவத்தை ஏற்படுத்தினார். பிரிகோஜிக்கும் ரஷ்யா பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்க்கும் இடையில் கடந்த சில மாதங்களாக மோதல் நிலவி வந்தது,
அதன் வெளிப்பாடுதான் மாஸ்கோவை நோக்கி வாக்னர் படைகள் முன்னேறிய நிகழ்வு.
000