பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவனநாளான இன்று, உலகிலேயே மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பா.ஜ.க-தான் என்றும், 365 நாள்களும் பா.ஜ.க-வுக்கு உறுப்பினர் சேர்க்கைதான் என்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
முன்னதாக பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவனநாள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களிலுள்ள பா.ஜ.க அலுவலகங்களில் இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதே போன்று தமிழ்நாட்டிலும், பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. கூடவே உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது. மேலும், அங்கே ஒரு சுவரில் பா.ஜ.க சின்னமான தாமரையை அண்ணாமலை வரைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “1977 எமர்ஜென்சி காலகட்டத்தில் ஜன சங்கம், நிறைய இயக்கங்கள் ஒன்றாக இணைந்து ஜனதா கட்சியாக மாறியது. மூன்று ஆண்டுகள் ஜனதா கட்சியாக ஒன்றாக இருந்தோம். அதன் பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக 1980, ஏப்ரல் 6-ல் மும்பையில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தின் வாயிலாக பா.ஜ.க அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 43 ஆண்டுகள் கடந்து 44-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம். எங்களுக்கு இது மிகப்பெரிய பிரமிப்பு.
காரணம் 1984-ல் பா.ஜ.க-வுக்கு வெறும் இரண்டு இடங்கள் மட்டும்தான் கிடைத்தது. குஜராத்தில் ஒரு எம்.பி, ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு எம்.பி. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க-வை கேலி செய்வார்கள். அப்போது வாஜ்பாய் ஒரு பொதுக்கூட்ட மேடையில், “ஒரு காலம் வரும், இந்தியாவை நிச்சயமாக நாங்கள் ஆட்சி செய்வோம், இந்தியாவில் ஒரு நல்லாட்சியைக் கொடுப்போம்” என்று சூளுரைத்தார். பல கடினமான சூழ்நிலைகளில் கட்சி வளர்ந்துகொண்டே இருக்கிறது.இப்போது 2023-ல் 303-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள், ஆயிரக்கணக்கான எம்.எல்.ஏ-க்கள், 18 மாநிலங்களுக்கு மேல் பா.ஜ.க ஆட்சி அல்லது அதன் கூட்டணி ஆட்சி. 43 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் இவ்வளவு பெரிய வளர்ச்சியைப் பார்த்திருக்க முடியுமா என்றால் முடியாது. எனவே, நாங்களும் வாஜ்பாய் சொன்னதுபோல சூளுரைத்துச் சொல்கின்றோம், தமிழ்நாட்டில் பா.ஜ.க ஆட்சிக்கு வரக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை.
பா.ஜ.க-வைப் பொறுத்தவரை, 365 நாள்களுமே உறுப்பினர் சேர்க்கை நாள்கள்தான். மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை உலகிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்திய கட்சி இது. அரசியல் என்பது சித்தாந்தம் சார்ந்த அரசியலாக இருக்க வேண்டும். சித்தாந்தரீதியாக உறுப்பினர்களாக இருந்தால் கட்சி செயல்படுவதற்கு எளிதாக இருக்கும்” என்றார்.
மேலும், “தி.மு.க-வின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்ல, சென்ற ஆட்சி காலத்தினுடைய ஊழலையும் நாங்கள் வெளியிடுவோம். நீங்களும் பார்ப்பீர்கள். மத்திய அரசைப் பொறுத்தவரை, 2ஜி ஊழலை துரிதப்படுத்தியிருக்கிறது” என அண்ணாமலை தெரிவித்தார்.