ஏப்ரல்.17
இந்திய அழகி 2023க்காக நடத்தப்பட்ட போட்டியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது நந்தினிகுப்தா முதலிடத்தைப் பிடித்து “மிஸ் இந்தியா 2023” பட்டத்தை வென்றார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரில் 2023ம் ஆண்டுக்கான இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டிக்கான நடுவர் குழுவில், கடந்த, 2002ல் இந்திய அழகி பட்டம் வென்ற பிரபல பாலிவுட் நடிகை நேஹா துபியா, குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி, நடன இயக்குனர் டெரன்ஸ் லுாயிஸ், திரைப்பட இயக்குனர் ஹர்ஷ்வர்தன் குல்கர்னி மற்றும் ஆடை வடிவமைப்பாளர்கள் ராக்கி ஸ்டார், ஜோஷிபுரா இடம்பெற்றிருந்தனர். இந்த நடுவர் குழு, அழகிப் போட்டியில் பங்கேற்ற பெண்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தியது.
அதில், ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவைச் சேர்ந்த நந்தினி குப்தா என்ற 19 வயது இளம்பெண், முதலிடத்தைப் பெற்று இந்திய அழகி பட்டத்தை தட்டிச்சென்றார். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நந்தினி குப்தா மேலாண்மை பட்டப்படிப்பை படித்து வருகிறார்.
இந்தப் போட்டியில், 2வது இடத்தை புதுடில்லியைச் சேர்ந்த ஸ்ரேயா பூஞ்சாவும், 3வது இடத்தை மணிப்பூரின் தோனோஜம் ஸ்டெர்லா லுவாங்கியும் பிடித்தனர்.
தற்போது, இந்திய அழகி பட்டம் வென்றுள்ள நந்தினி குப்தா, இந்த ஆண்டு நடைபெறவுள்ள மிஸ் யுனிவர்ஸ் எனப்படும் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.