மிஸ் கூவாகம் 2023 – சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா பட்டம் வென்றார்

மே.3

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ்கூவாகம் 2023 போட்டியில் சென்னையைச் சேர்ந்த திருநங்கை நிரஞ்சனா அழகிப் பட்டம் வென்றார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழாவை காண வந்துள்ள திருநங்கைகளை மகிழ்விக்கும் வகையில், மிஸ் கூவாகம் அழகி போட்டி உளுந்தூர்பேட்டையில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்டது.

போட்டியின் முதல் சுற்று மற்றும் 2-ம் சுற்று தேர்வு போட்டிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்ற 46 திருநங்கைகளில் 16 பேர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று காலை, விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் மிஸ் கூவாகம் அழகி போட்டியின் இறுதிச்சுற்று போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

2-வது சுற்று அழகி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 16 பேரில் ஒருவவரைத் தவிர மற்ற 15 பேரும் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி திருநங்கைகளின் ஆரவாரத்திற்கு இடையே ஒய்யாரமாக நடந்து வந்தனர். இதில், தமிழ் கலாசாரம், நடை, உடை, பாவணை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் சேலம் சாதனா, தூத்துக்குடி ரித்திகா, நவீனா, சென்னை ஷாம்ஸ்ரீ, நிரஞ்சனா, டிஷா, பெங்களூரு சுபாஷினி ஆகிய 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் மிஸ் கூவாகமாக யாரை தேர்ந்தெடுப்பது என்பதற்காக, இவர்கள் 7 பேருக்கும் பொது அறிவுத்திறன் குறித்தும், எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இதில், சிறந்த முறையில் பதில் அளித்த சென்னையை சேர்ந்த நிரஞ்சனா மிஸ் கூவாகம்-2023-க்கான அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதேபோல், சென்னையை சேர்ந்த டிஷா 2-ம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த சாதனா 3-ம் இடத்தையும் பிடித்தனர். வெற்றிபெற்ற திருநங்கைகளுக்கு எம்.எல்.ஏ புகழேந்தி கிரீடம் அணிவித்து பாராட்டுத்தெரிவித்தார்.

மிஸ் கூவாகமாக தேர்வான சென்னையை சேர்ந்த நிரஞ்சனா பேசுகையில், திருநங்கைகள், தற்போது எல்லாத்துறைகளிலும் சாதிக்க தொடங்கி விட்டனர். எங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு உரிய இடஒதுக்கீடு வழங்கினால், அனைவருமே வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்வோம் என்று தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *