மீண்டும் கனவு காணும் தேவகவுடா மகன்!

ஜுலை, 24-

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி.

தந்தைக்கு வயதாகி விட்டதால், அவர்கள் குடும்பக்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தை குமாரசாமிதான் பராமரித்து வருகிறார்.  சோனியாவுக்கும் ராகுலுக்கும் கிடைக்காத வாய்ப்பு தேவகவுடாவுக்கு கிடைத்தது. கடந்த 1996- ல் 20 சொச்சம் எம்.பி.க்களை வைத்துக்கொண்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார், தேவகவுடா.

மகனுக்கும் அதே ராசி போலும். 30 பிளஸ் எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த குமாரசாமி இரண்டு முறை கர்நாடக முதல் அமைச்சராக பதவி வகிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. ஒரு முறை பாஜகவும்,இன்னொரு முறை காங்கிரசும் அவருக்கு பல்லக்கு தூக்கின.

ஆமாம்.

ஒரு தடவை பாஜக ஆதரவிலும்,மற்றொரு தடவை காங்கிரஸ் தயவிலும் விதான் சவுதாவை ஆண்டார், குமாரசாமி. மூன்றாம் முறை முதல்வர் நாற்காலியில் அமரும் வாய்ப்பு தன்னை தேடி வரும் என கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பகிரங்கமாகவே சொன்னார். ’’யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. நானே முதல்வர் ஆவேன்’ என சூளுரைத்து பரப்புரை செய்தார்.

அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை கிட்டவில்லை. தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 66 இடங்களைப் பிடித்து 2-வது இடத்தையும், குமாரசாமி கட்சி 19 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி 3 ஆம் இடத்தையும் பிடித்தன. கர்நாடக முதல்வராக சித்தராமய்யா பொறுப்பேற்றார்.

பாஜக சார்பில் இன்னும் எதிர்க்கட்சி தலைவர் பெயர் அறிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர்கள் அசோகா, சோமண்ணா, அஷ்வத் நாராயண் உள்ளிட்டோர் காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆளும் காங்கிரஸுக்கு எதிரான போராட்டங்களில் பாஜகவுடன்,மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்களும் பங்கேற்றுள்ளனர்.சில தினங்களுக்கு முன்பு பாஜக எம்எல்ஏக்கள் 10 பேர் பேரவையில் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் குமாரசாமி பாஜகவினருடன் சென்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தார்.

கர்நாடகாவில் காங்கிரஸை எதிர்க்க பாஜகவுடன் இணைந்து செயல்படப் போவதாகவும் அறிவித்தார்.   மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காகவே பாஜகவுடன் குமாரசாமி கைகோத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் கர்நாடகத்தில் வெல்ல வேண்டுமானால், குமாரசாமி தயவு தேவை என பாஜக மேலிடம் நம்புகிறது.

எனவே 19 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ளகுமாரசாமிக்கு, 66 இடங்களை வைத்துள்ள பாஜக எதிர்க்கட்சி பதவியை விட்டு கொடுக்கும் என்பதே அந்த மாநில நிலவரம்.

பாஜகவுக்கு இது ஒன்றும் புதிய விஷயம் அல்லவே.

மகாராஷ்டிராவில் கூடுதல் தொகுதிகளில் ஜெயித்த பாஜக, சொற்ப எம்.எல்.ஏ.க்களுடன் சிவசேனாவில் இருந்து வந்த ஏக்நாத்தை முதல்வர் நாற்காலியில் அமர்த்தி, ஒரு முன் மாதிரியை ஏற்படுத்தியுள்ளதே!

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *