ஜுலை,29-
மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார்.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில் ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார்.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனது இரண்டாவது நடை பயணத்தை குஜராத் மாநிலம் போர்பந்தரில் தொடங்குகிறார். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அல்லது காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2 ஆம் தேதி பயணம் ஆரம்பமாகும்.
வட இந்தியாவில் முக்கிய மாநிலங்கள் வழியாக பயணிக்கும் ராகுல் யாத்திரை திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் நிறைவடைகிறது. நாட்டிலேயே அதிகமாக 80 தொகுதிகளை கொண்டுள்ள உத்தரபிரதேசத்தில் அதிக நாட்கள் நடக்க திட்டமிட்டுள்ளார், ராகுல். கடந்த பயணத்தில் அந்த மாநிலத்தில் உள்ள காசியாபாத், பக்பத், ஷாம்லி ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே அவர் பாதயாத்திரை மேற்கொண்டார்.
இரண்டாம் பயணத்தில் அநேகமாக எல்லா மாவட்டங்களுக்கும் ராகுல் செல்லும் வகையில் பயணத்திட்டம் உருவாக்கப்படும் என உத்தரபிரதேச காங்கிரசார் தெரிவித்து இருக்கின்றனர்.
000