ஆகஸ்டு,19-
திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவல் போன்று, மகாராஷ்டிர மாநில அரசியலில் விதம் விதமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அங்கிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று முதலமைச்சர் ஆனார்.
அவரை கவிழ்க்க சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக பேரம் பேசியது. பாஜக வலையில் அவர் வீழ்ந்தார்.கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன், சிவசேனாவில் இருந்து விலகிய ஏக்நாத்தை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தது, பாஜக. ஏக்நாத்துக்கு அன்று ஆரம்பித்தது, தலைவலியும், திருகுவலியும். அமைச்சரவை விரிவாக்கத்தின் போதெல்லாம் ஏக்நாத்தை மிரட்டியும், அச்சுறுத்தியும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பதவி பெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.கோக்வாலே என்பவரை அமைச்சராக்க ஏக்நாத் தீர்மானித்தார்.அப்போது மற்றொரு அதிருப்தி எம்.எல்.ஏ.ஒருவர், ஏக்நாத்தை சந்தித்தார்.’ எனக்கு அமைச்சர் பதவி வேண்டும். நான் அமைச்சராகாவிட்டால், என் மனைவி தற்கொலை செய்து கொள்வார்’என ஏக்நாத்தை மிரட்டியுள்ளார். இதனால் வெலவெலத்துப்போன ஏக்நாத், கோக்வாலேயை நட்டாற்றில் விட்டு விட்டு, மிரட்டல் விடுத்த எம்.எல்.ஏ.வை அமைச்சர் ஆக்கினார்.
எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்து விடுவதாகவும், ஏக்நாத் அரசை கவிழ்த்து விடுவதாக மிரட்டியும் இரு எம்.எல்.ஏ.க்கள் அமைச்சராகியுள்ளனர். இந்த தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்ட கோக்வாலே,’ஒவ்வொரு முறை அமைச்சரவை விரிவு படுத்தும் போதெல்லாம் எனது பெயர் இருக்கும். கடைசி நேரத்தில் ‘வெய்ட்டிங் லிஸ்டில் ‘ வைத்து விடுகிறார், ஏக்நாத். பிளாக் மெயில் செய்பவர்களுக்குத்தான் அரசியலில் பதவிகள் கிடைக்கிறது’ என விசும்ப ஆரம்பித்தார்.
எக்நாத் ஷிண்டே மனம் திறந்தால், இதனை காட்டிலும் சுவாரஸ்ய தகவல்கள் கிடைக்கலாம்.
000