சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் செய்ய இருந்த பாதையில் அரசு பேருந்து விபத்தில் சிக்கியதால் போலிஸ் அதிகாரிகள் பெரும் பதற்றத்திற்கு ஆளானார்கள்.
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் 25 ஜி என்ற எண் கொண்ட பேருந்து காலை 11: 40 மணி அளவில் அண்ணா சதுக்கத்தில் புறப்பட்டு அண்ணா மேம்பாலம் வந்து கோடம்பாக்கம் செல்வதற்கு கீழே இறங்கும் போது பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி விபத்துக்கு ஆளானது. சுவரில் சிக்கிக் கொண்ட பேருந்தை திருப்ப முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. இதனால் அண்ணா மேம்பாலம் மற்றும் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சரியாக 12.10 மணி அளவில் முதல்வர் கார் செல்வதற்கான பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்திருந்த போலிசார் அதிர்ச்சிக்கு ஆளானார்கள்.
அவர்கள் பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினர். ஆனால் பேருந்து பக்கவாட்டு சுவர்களில் மோதி நின்றதால் எடுக்க முடியவில்லை.
முதல்வர் கார் வருகிறது என்று வாக்கி டாக்கிகள் அலறியதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அனைவரும் செய்வது அறியாது தவித்தனர்.
நல்ல வேளை, அவர்களுக்கு சம்மட்டியுடன் தொழிலாளர் ஒருவர் கிடைத்தார். அவரைக் கொண்டு அண்ணா மேம்பாலத்தின் சுவர்களை இடித்து பேருந்தை பத்திரமாக மீட்டனர்.
மீட்ட சில நிமிடங்களில் முதல்வர் கார் மேம்பாலத்தை கடந்து சென்றது. அப்போதுதான் காவலர்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் அதிர்ச்சியில் இருந்ததால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முதல் உதவிக்காக அனுமதிக்கப்பட்டனர்.
000