ஏப்ரல்.15
தேர்தல் ஆணையத்தில் கொடுத்த சொத்து ஆவணங்களைத் தொகுத்து பட்டியல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, என்னைப் பற்றிய தகவல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார், முதலமைச்சரின் அனுமதிபெற்று அவர்மீது நானே வழக்குத் தொடரவுள்ளேன் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அண்ணாமலை காட்டியதை மனசாட்சி இருக்கும் யாருமே பில்லாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பில் என காகிதத்தை வெளியிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்க வேண்டும். இந்த எக்ஸ்எல் சீட் தயாரிக்கவா 4 மாதம் ஆனது? எனக்கு எதுவுமே கிடையாது. எல்லாமே எனது நண்பர்கள் கொடுக்கின்றனர் என அண்ணாமலை தெரிவித்ததை சுட்டிக்காட்டினார்.
அண்ணாமலை குடியிருக்கும் வீட்டின் வாடகை மாதம் 3.75 லட்சம். இந்த வாடகையை மாத மாதம் இதை யார் கொடுக்கின்றார்?. ஒரு மாதம் உதவி செய்யலாம், வருடம் முழுக்க யார் உதவி செய்வார்? ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு பணம் அனைத்தும் வெளியிலிருந்து வருகிறது என்றால், பணம் எங்கே வார்ரூம்மில் இருந்து வருகிறதா? என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு நடத்தியதற்குப் பதிலாக வீடியோ ரெக்கார்டு பண்ணி அனுப்பி இருக்கலாம், பத்திரிகையாளர்களுக்கு கேள்வி கேட்கவே வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் குறிப்பிடும் நபர் வாட்ச் வாங்கியது 4.5 லட்சம் ரூபாய், அதை 3 லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கொடுத்ததாக சொல்கிறார். கிடைக்காத அரிய பொருளின் மதிப்பு கூடுமே தவிர குறையாது. வாட்ச் நம்பரையும் மாற்றி, மாற்றி சொல்கின்றார். அதில் இருக்கும் தகவல்களை மாற்றி சொல்கிறார்.
ஒரு வெகுமதியை மறைக்க, லஞ்சத்தை மறைக்க ஆயிரம் பொய்யை சொல்கின்றார் அண்ணாமலை. பரிசு கொடுத்தார்கள் என சொல்வதில் அண்ணாமலைக்கு என்ன தயக்கம்?. தேசியக் கட்சியில் இருப்பதால் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் குற்றச்சாட்டை சொல்கின்றார். அவர் வெளியிட்ட பட்டியலில் ஒரு ஆதாரம், ஒரு அடையாளம் என ஒன்றுமே இல்லை.
அண்ணாமலை காருக்கு யார் டீசல், பெட்ரோல் போடுகிறார்கள், மூன்று உதவியாளர்களுக்கு யார் சம்பளம் கொடுக்கிறார்?. 4 ஆட்டை மேய்த்தால் சென்னையில் 3.75 லட்சம் வாடகைக்கு வீட்டில் இருக்க முடியுமா? தூய்மையாக இருக்கின்றீர்கள் என்றால் ஏன் அடுத்தவன் சொத்தில் வாழுறீங்க?
அவர்கள் கட்சியில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கின்றனர், எவ்வளவு பூத் கமிட்டி அமைத்து இருக்கின்றனர், தேர்தலில் எதை செய்யப் போகின்றனர் என்பதை சிந்தித்து தேர்தல் பணி செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு தேர்தல் ஆணையத்தில் கொடுத்து இருக்கும் சொத்து ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு இருக்கின்றார். என்னை பற்றியும் அவர் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கின்றார். முதல்வர் அனுமதிபெற்று, நீதிமன்றத்தில் அண்ணாமலைமீது நாளே வழக்கை தாக்கல் செய்ய இருக்கின்றேன்.
இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.