நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்திற்கு நாளை மறுநாள் (ஏப்.9) பிரதமர் நரேந்திர வருவதையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புலிகள் பாதுகாப்பு திட்டம்தொடங்கியதன் 50-வது ஆண்டைக் கொண்டாடும் விதமாக வருகின்ற 9-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்குச் செல்கிறார். அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கும் அவர் வரவுள்ளார். அதன்படி, வரும் 9-ந்தேதி காலை 9.35 மணிக்கு வரும் அவர், வளர்ப்பு யானைகள் முகாமை பார்வையிடுகிறார்.
பின்னர் ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் யானைகள் குறித்த ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியை நேரில் சந்திப்பதுடன், ரகு மற்றும் பொம்மி யானைகளையும் பார்க்கிறார். யானை பகன்கள் மற்றும் பழங்குடியின வனத்துறை ஊழியர்களிடம் உரையாடும் மோடி, பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக மசினகுடி சென்று ஹெலிகாப்டர் மூலமாக மீண்டும் மைசூர் செல்கிறார்.
முதுமலை புலிகள் காப்பகத்திற்கு பிரதமர் வரவுள்ளதையொட்டி, தெப்பக்காடு பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் 9ம் தேதி வரை முதுமலையில் உள்ள அனைத்து ஓய்வுவிடுதிகள், துயிலகங்கள், உணவகம், சிற்றுண்டியகம் மூடப்படுகிறது. மேலும், வனவிலங்குகளை காண்பதற்கான வாகன சவாரியும் இன்று முதல் 9ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதோடு, அப்பகுதியில் டுரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 8-ந்தேதி மாலை 4 மணி முதல் 9-ந்தேதி காலை 10.30 மணி வரை தொரப்பள்ளி – கக்கநல்லா – பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலை மூடப்படுகிறது. இதனிடையே தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமை சீரமைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.