நடிகர் ஏ.வி.எம்.ராஜனின் மனைவியும், பழம்பெரும் நடிகையுமான புஷ்பலதா காலமானார். அவருக்கு
வயது 86.
புஷ்பலதாவின் சொந்த ஊர் மேட்டுப்பாளையம். 1961- ஆம் ஆண்டு வெளிவந்த, ‛கொங்கு நாட்டு தங்கம்’ திரைப்படம் மூலம், நடிகையாக அறிமுகமானவர் புஷ்பலதா. தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களில் எங்கள் தங்கம்,உரிமைக்குரல், நீதிக்கு தலை வணங்கு ஆகிய படங்களும், சிவாஜியுடன் நடித்த சினிமாக்களில் பார் மகளே பார், ஆலயமணி, பச்சை விளக்கு ஆகிய படங்களும் குறிப்பிடத்தக்கவை.
சகலகலா வல்லவன், நான் அடிமை இல்லை ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
ஏ.வி.எம்.ராஜனுடன் இணைந்து, ‛நானும் ஒரு பெண்’ என்ற படத்தில் நடித்த போது, அவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
70 களில் இருந்து ஏராளமான துணை கதபாத்திரங்களில் நடித்த அவர் 1999ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘பூவாசம்’ என்ற படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
சென்னை தியாகராயநகரில் வசித்து வந்த புஷ்பலதா, வயது மூப்பு காரணமாக, தனது 86வது வயதில், நேற்று மரணம் அடைந்தார்.
புஷ்பலதாவின் மறைவு தமிழ் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். புஷ்பலதாவின் இறுதிச் சடங்கு சென்னையில் உள்ள அவரது வீட்டில்
இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது