ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பவுலிங்கை தேர்வு செய்தார்.
சென்னை அணியின் பவுலர்கள் மும்பை பேட்ஸ்மேன்களை திணறடித்து ரன் குவிப்பை கட்டுப்படுத்தினர். பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சஹார், தேஷ் பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி களம் இறங்கியது. சென்னை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்னும், டெவோன் கான்வே 44 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். குறைவான இலக்கு என்பதால் சென்னை பேட்ஸ்மேன்கள் நிதானத்துடன் ரன்களை சேர்த்தனர்.
அஜிங்யா ரஹானே 17 பந்தில் 21 ரன்னும், அம்பதி ராயுடு 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே 26 ரன்கள் சேர்க்க 17.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.