மூட நம்பிக்கை.. கதவைத் திற.. காற்று வரட்டும்.. முதலமைச்சர் உத்தரவு.

தமிழக தலைமைச்செயலகத்தை,நாம் கோட்டை என சொல்வது போல், கர்நாடக தலைமை செயலகத்தை விதான் சவுதா கட்டிடம் என அழைக்கிறார்கள்.

அங்கு முதலமைச்சரின் அலுவலகம் 3-வது மாடியில் உள்ளது.இதனுள் நுழைய தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் இரண்டு வாயில்கள் உள்ளன.தெற்கு வாயிலின் நுழைவு வாயில் ’வாஸ்து சரி இல்லை’ என யாரோ ஒரு ஜோதிடர் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார்.

‘அந்த வாயில் வழியாக அலுவலகத்தில் நுழைந்தால் முதல்வர் பதவி காலி ‘’ என்பதும் ஜோதிடரின் அச்சுறுத்தலாகும். இதனால் மிரண்டு போய் இதுவரை முதலமைச்சராக இருந்தோர் அந்த வாயில் கதவை கடந்த 5 ஆண்டுகளாக, மூடியே வைத்திருந்தார்கள்.

குமாரசாமி, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகிய மூவரும் வாஸ்து சாஸ்திரத்தை வேத சாஸ்திரமாக கருதி, தப்பித்தவறியும் தெற்கு பக்கம் தலை வைத்தும் படுத்ததில்லை.

அண்மையில் முதல்வர் பதவி ஏற்ற சித்தராமையா இதனை கவனித்தார்.’ஏன் தெற்கு வாயில் கதவை அடைத்து வைத்துள்ளீர்கள்?’என கேட்க, வாஸ்து விவரத்தை சொன்னார்கள் அதிகாரிகள்.

சித்தராமையாவுக்கு பயங்கர கோபம்.

‘எனக்கு ஜோதிடம், வாஸ்து போன்ற மூட பழக்க வழக்கங்களில் நம்பிக்கை கிடையாது. தெற்கு வாயில் கதவை திறந்து வையுங்கள்.காற்று வரட்டும்..இனிமேல் அதன் வழியாகவே வருவேன்’ என ஆணையிட்டார்.

’நல்லமனம், சுத்தமான இதயம், பிறர் மீதான அக்கறைதான் முக்கியம்.வாஸ்து எனும் பெயரில் சுவர்களை இடிப்பது, நுழைவு வாயிலை மாற்றுவது வீண் வேலை’ என கொந்தளித்தார்.

உடனடியாக தெற்கு வாயில் கதவு திறக்கப்பட்டது.அந்த வாயில் வழியாகவே இப்போது தினமும் அலுவலகம் வருகிறார், சித்தராமையா.

சித்தராமையாவுக்கு கடவுள் பக்தி உண்டு.ஆனால் மூடப்பழக்கவழக்கங்களை வெறுப்பவர். தேர்தல் சமயங்களில் கோயிலுக்கு போவார்.

மற்றபடி,தினமும் குளித்து முடித்து, சாமிக்கு பூஜை, புனஸ்காரங்கள் செய்து, நெற்றியில் விபூதியிட்டு, பைல்கள் பார்க்கும் வழக்கம் கிடையாது.

திருவிழாக்களுக்கு செல்லும் வழக்கமும் இல்லை.

மடாதிபதிகள், ஆன்மீக தலைவர்களை கிட்டே நெருங்க விடுவதில்லை.

கர்நாடக முதல்வர்கள் ,சாம்ராஜ்நகர் மாவட்டம் போனால், பதவிக்கு ஆபத்து என ஒரு பலரும் சொல்வார்கள்.

ஆனால் ,சித்தராமையா 2013 ல் முதல்வர் பதவி ஏற்றதும் முதல் வேலையாக சாம்ராஜ் நகருக்குதான் போனார். 5 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடித்தார்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *