அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி , இயக்கியுள்ள படம் – ‘கூரன்’.
சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் நாய் முதன்மைக் கதாபாத்திரத்திலும் அந்த நாய்க்கு நீதி பெற்றுக்கொடுக்கும் வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரன் நடித்துள்ளனர்.
எஸ்.ஏ.சி.தான் ஹீரோ. ஒய். ஜி. மகேந்திரன், சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
‘கூரன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
விழாவில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசியதாவது:
‘பலவகையிலும் ‘கூரன்’ வித்தியாசமான படம். என்னுடைய 45 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் உண்மையிலேயே வித்தியாசமானது என்று சத்தியம் செய்வேன்.
. வாய்பேச முடியாத- ஆனால், அறிவுள்ள ஜீவனாக இருக்கும் ஒரு நாய், தன்னுடைய சட்டப் போராட்டத்திற்கு நீதிமன்றம் வரை சென்று சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சி சொல்கிறது. அது எப்படிச் சொல்கிறது என்பதுதான் படத்தின் சுவாரசியம்.
இந்தப் படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை டூயட் இல்லை. நடனம் இல்லை.இதில் நடித்தவர்களில் நானும் ஒய்.ஜி. மகேந்திரனும் 80 வயதுக்காரர்கள்.
இந்தப் படத்தை டெல்லியிலிருந்து மேனகா காந்தி பார்த்திருக்கிறார். அவர் படத்தைப் பார்த்து விட்டு உடனே எழுந்திருக்கவில்லை, கண்கலங்கினார்’என்று சிலாகித்தார், ஏஸ்.ஏ.சந்திரசேகரன்.
மேனகா காந்தி முன்னாள் மத்திய அமைச்சர்.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் மனைவி.
—