ஏப்ரல்.20
மோடி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டபோது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?” என பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ராகுல்காந்தி மீது குஜராத் மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி, சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், இந்த வழக்கில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை ஒரு மாதத்துக்கு நிறுத்தி வைத்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது.
இதையடுத்து, ராகுல்காந்தி, கடந்த 3-ந்தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். அதன்படி, அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். மேலும், ராகுல்காந்தி மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ந்தேதி விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
அதன்படி, கடந்த 13ம் தேதி இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் மனு மீதான தீர்ப்பை 20-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. அவதூறு வழக்கில் ராகுல் குற்றவாளி என சூரத் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எச்.எச்.வர்மா அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், அது ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பையும் நிறுத்தி வைக்கும். அதன்மூலம், அவர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்ல வாய்ப்புக்கிடைக்கும் என்பதால், இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும உள்ள காங்கிரஸ் கட்சியினர் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.