மே.18
நடப்பாண்டில் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக ‘நிதி ஆயோக்’ என்ற அமைப்பினை பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்தது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திரமோடியும், துணைத்தலைவராக சுமன் பெரியும் இருந்துவருகின்றனர். இந்த அமைப்பின் ஆட்சிமன்ற குழுவில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் , யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆண்டு இந்த நிதி ஆயோக் கூட்டம் ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நடப்பாண்டிற்கான நிதி ஆயோக் ஆட்சிமன்ற குழு கூட்டம், வரும் 27-ந் தேதி டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார்.
இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். மாநிலங்கள் தங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இந்தக் கூட்டத்தின் வாயிலாக பிரதமரிடம் கோரிக்கை வைக்கவுள்ளன. அதே நேரத்தில், மாநிலங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைக்க வேண்டும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கு இலக்கு வைத்து பாடுபட வேண்டும் என்று அந்தந்த மாநில முதலமைச்சர்களை பிரதமர் மோடி வலியுறுத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.