நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் உண்டு. ஆசைகளும் இலக்குகளும் வெவ்வேறானவை. ஆனால், மூன்றாம் முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்து விடக்கூடாது என்பதில் அவர்களிடையே கருத்து பேதம் இல்லை.
இந்த ஒற்றைப்புள்ளியை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாவே மும்முரமாக இறங்கினார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவர் ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் 17 எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பாஜகவுக்கு எதிராக 400 தொகுதிகளில் பொது வேட்பாளரை நிறுத்துவது என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் வெற்றியை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கெடுக்கும் இரண்டாவது கூட்டம் பெங்களூருவில் வருகிற 17 மற்றும் 18-ஆகிய தேதிகளில் நடக்கிறது. 17-ந்தேதி இரவு விருந்துடன் கூடிய கூட்டமும், 18-ந்தேதி பிரதான நிகழ்வான ஆலோசனையும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்திருக்கிறது.
பாட்னா கூட்டத்துக்கு சிறு,குறு கட்சிகள் அழைக்கப்படவில்லை. ஆனால் பெங்களூர் கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாட்னாவுக்கு அழைக்கப்படாத ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், ராஷ்ட்ரீய சோஷலிச கட்சி, பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மாணி) போன்ற கட்சிகளுக்கும் இந்தமுறை அழைப்பு அனுப்பியுள்ளார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
பாட்னாவில் நடந்த ஆலோசனையில் சோனியா பங்கேற்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடத்தும் மாநிலம் என்பதால் பெங்களூரு கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்தக் கூட்டத்தில்,பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர்களை நிறுத்துவது குறித்து-அதாவது பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான தொகுதிகள்,அங்கு போட்டியிடும் கட்சிகள் குறித்து முடிவு செய்யப்படலாம்.
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பற்றியும் விவாதிக்கப்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.
பா.ஜ.க.வுக்கு எதிரான இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகள் அனைத்து தரப்பினராலும் ஆவலுடன் கவனிக்கப்படுகிறது என்பது மட்டும் உண்மை,
000