பிரதமர் மோடி சென்னையில் தொடங்கிவைத்த வந்தே பாரத் ரயில் குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரயில் சேவையில் பயணிகளின் வசதிக்காக பயண நேரத்தைக் குறைக்கும் நோக்கில் ஒன்றிய ரயில்வே துறை சார்பில் வந்தே பாரத் என்னும் அதிவிரைவு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.தமிழ்நாட்டில் ஏற்கனவே சென்னையில் இருந்து மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் பயன்பாட்டில் உள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தேபாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “2016 ஆம் ஆண்டு சீனா சென்றிருந்தபோது புல்லட் ரயிலில் பயணித்தேன். அப்போது என் மனதில் ஒரு பெரிய ஏக்கம் இருந்தது. நம்நாடு எப்போது இந்த மாதிரியான ரயில்களை கொடுக்கும் என்று, அந்த கனவு தற்போது நனவாகியிருக்கிறது. அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி நடத்துகிறார் பிரதமர் மோடி. அதேபோல் அனைத்து மாவட்டங்களுக்கும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்துவார். டெல்டா பகுதியில் நிலக்கரி சுரங்கம் வேண்டாம் என்பது பாஜகவின் நிலைப்பாடு” என்றார்.