ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து, 28 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்.
தற்கால அரசியலில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும், மக்கள் உரிமையை மீட்க வேண்டும், வறுமை ஊழலை ஒழிக்க வேண்டும் எனப் பலர் சித்தாந்தங்களோடும், கொள்கைகளோடும் களமிறங்குகின்றனர். ஒரு பக்கம் அது நிதர்சனம் என்றாலும்கூட, இன்னொரு பக்கம் அரசியலைப் பலரும், தேர்தலில் செய்த முதலீடுகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதிகாரத்தோடு வட்டியும் முதலுமாக எடுத்து, சொத்துச் சேர்க்கும் களமாகவே பார்க்கின்றனர் என்றும் கூறுகின்றனர். அதற்கு அவ்வப்போது ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசியல்வாதிகளே சான்றுகளாவார்கள்.
இந்த நிலையில் இந்தியாவிலுள்ள 30 முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள் எனத் தரவுகள் வெளியாகியிருக்கின்றன. இது தொடர்பாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR), தேர்தல் கண்காணிப்பகம் (NEW) ஆகிய இரண்டும், தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் ஆய்வுசெய்து பட்டியலை வெளியிட்டிருக்கின்றன. அதன்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைத் தவிர்த்து, 28 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 30 முதலமைச்சர்களில் 29 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்.
இவர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.33 கோடி என்று ADR கூறுகிறது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ரூ.510 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இருக்கிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.163 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளுடனும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.63 கோடிக்கு மேற்பட்ட சொத்துகளுடனும் இருக்கின்றனர்.
அதேபோல், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ரூ.3 கோடிக்கும் அதிகமான சொத்துகளும், கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஹரியானா முதல்வர் மனோகர் லால் ஆகியோருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான சொத்துகளும் இருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.
அதோடு இந்தப் பட்டியலில் மிகக் குறைந்த சொத்து மதிப்புடைய முதல்வராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்துக்கு மேல். இந்தப் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ரூ.8 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் 14-வது இடத்தில இருக்கிறார்.
மேலும், இந்த 30 முதல்வர்களில்13 பேர்மீது கொலை, கொலைக்கான முயற்சி, கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட கடுமையான குற்றவியல் வழக்குகள் இருப்பதாக ADR தெரிவித்திருக்கிறது. அதுவும் இவை ஐந்தாண்டுகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு சிறைத் தண்டனையுடன்கூடிய குற்றங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.