மோடி என்னை பாராட்டி பேசிய பிறகு என்னை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று சிலர் அழைத்தது எனக்கு அவமானகரமானது என்று முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
முன்னாள் காங்கிரஸ்காரரும், மூத்த அரசியல்வாதியுமான குலாம் நபி ஆசாத், நேற்று தனது சுயசரிதையான ஆசாத் புத்தக வெளியீட்டு விழாவையொட்டி செய்தி நிறுவனம் ஒன்று பேட்டி அளித்தார். அப்போது குலாம் நபி ஆசாத் கூறியதாவது: பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக பிரதமர் மோடி இருந்த காலத்திலிருந்தே அவருடன் எனக்கு நல்லுறவு இருந்தது. 2021 பிப்ரவரி 15ம் தேதியன்று நான் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் போது, பிரதமர் மோடி உள்பட 20 பேர் என்னை பாராட்டி பேசினர். பிரதமர் மோடி என்னை பாராட்டி பேசிய பிறகு என்னை பா.ஜ.க.வின் ஏஜெண்ட் என்று சிலர் அழைத்தது எனக்கு அவமானகரமானது.
அதாவது சிலரின் மூளை மாசுபட்டுள்ளது. மாசுபட்ட மூளை உள்ளவர்களால் மட்டுமே இது போன்ற விஷயங்களை சொல்ல முடியும். அத்தகைய நபர்கள் அரசியலை பற்றிய அடிப்படை புரிதலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் அரசியல் சொற்பொழிவின் அடிப்படை ஏ.பி.சி.களைக் கற்றுக்கொள்ள மழலையர் பள்ளிக்கு அவர்கள் செல்ல வேண்டும். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப என்னால் இயன்றவரை முயற்சித்தேன். பிரதமர் மற்றும் அவரது சகாக்களை ஒவ்வொரு முறையும் அவையில் எதிர்கொண்டேன். ஆனால் அவரது (மோடி) அரசாங்கத்தின் செயல்பாட்டிற்க எதிராக நான் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகளுக்கு அவர் ஒரு போதும் எதிர்வினையாற்றவில்லை.
விமர்சனங்களை சகித்துக் கொள்ளும் திறன் கொண்ட அவர் சிறந்த கேட்பவராக இருப்பதை நான் கண்டேன். சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் ஹிஜாப் உள்பட விவகாரங்களில் மோடி அரசை எதிர்த்தேன். நாடாளுமன்றத்தை புறக்கணிப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் உண்மையில் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்களா என்பதை சுயபரிசோதனை செய்ய வேண்டும். எம்.பி.க்கள் விவாதத்தில் ஆர்வம் காட்டததால் இன்று மசோதாக்கள் அமளியில் நிறைவேற்றப்படுகின்றன. எம்.பிக்களுக்கு ஆர்வமில்லையா அல்லது அவர்களின் தலைவர்களுக்கு ஆர்வமில்லையா என்பது எனக்கு தெரியாது. இது மில்லியன் டாலர் கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.