எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது பல பிரச்னைகளில் பிரதமர் மோடிக்கு எதிராக குரல் எழுப்பியபோதும், அவர் என்னை பழிவாங்காமல், ஒரு அரசியல்வாதியாக நடந்துக்கொண்டார் என பெருமிதத்துடன் கூறியுள்ளார், காங்கிரசில் இருந்து விலகி புதுக்கட்சி துவக்கிய குலாம் நபி ஆசாத்.
ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்தார். மொத்தம் 23 காங்., மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. குலாம் நபி ஆசாத் எம்.பி.,யாக பார்லி.,யில் இருந்து ஓய்வு பெறும்போது, பிரதமர் மோடி அவரை பாராட்டி பேசியிருந்தார். கடந்தாண்டு காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், ‛ஜனநாயக ஆசாத் கட்சி’ என்ற கட்சியை துவக்கினார்.
இந்த நிலையில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு குலாம் நபி ஆசாத் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் மோடிக்கு நன்றி சொல்ல வேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை சட்டம், ஹிஜாப் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எதிர்த்து குரல் எழுப்பினேன். அதனால் சில மசோதாக்கள் முற்றிலும் தோல்வியடைந்தன. ஆனால் அதற்காக என்னை பிரதமர் மோடி பழிவாங்காமல் ஒரு அரசியல்வாதியாக நடந்துகொண்டார் என்ற பெருமையை அவருக்கு அளிக்க வேண்டும்.
காங்கிரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 23 தலைவர்கள் பின்னால் பா.ஜ., இருப்பதாக கூறுவது முட்டாள்தனமானது. அப்படி இருந்தால், அவர்கள் ஏன் காங்கிரசால் எம்.பி., ஆக்கப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் பொதுச்செயலாளர், பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்? நான் மட்டுமே புதுக்கட்சியை துவக்கியுள்ளேன். மற்றவர்கள் எல்லாம் இன்னும் காங்.,கில் தான் இருக்கின்றனர். எனவே இதெல்லாம் சின்னப்பிள்ளைத்தனமான குற்றச்சாட்டு. இவ்வாறு அவர் கூறினார்.