கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மத்தியபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, கமல்நாத் முதலமைச்சரானார்.
ஆட்சியை இழந்த பா.ஜ.க.,கமல்நாத்தை கவிழ்ப்பதற்காக ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியது.
முதலமைச்சர் பதவி கிடைக்காத புழுக்கத்தில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா,கமல்நாத்தை விரட்ட பல்வேறு வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்ததை பா.ஜ.க.பயன்படுத்திக்கொண்டது.
கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் சிந்தியா, காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமானார்.கமல்நாத் கவிழ்ந்தார். பாஜகவின் சிவராஜ்சிங் சவுகான் முதல்வரானார்.கையூட்டாக சிந்தியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.
மத்தியபிரதேசத்தில் நவம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சில அமைப்புகள் மேற்கொண்ட கருத்துகணிப்புகள், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என கட்டியம் கூறுவதால், பாஜக மேலிடம் மிரண்டுள்ளது.
காவிகட்சியில் அதிருப்தியுடன் உள்ள மூத்த தலைவர்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து புறப்பட்டு , காங்கிரசில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் கைலாஷ் ஜோஷியின் மகன் தீபக் ஜோஷி, பாஜகவை கை கழுவி காங்கிரசில் சேர்ந்து, ’கட்சி தாவல் படல’த்துக்கு பிள்ளையார் சுழி போட்டார்.இப்போது தினமும் ஏதாவது ஒரு வி.ஐ.பி. காங்கிரசுக்கு வருகி்றார்.
கடந்த திங்கள்கிழமை பாஜகவின் சிவபுரி மாவட்ட துணை தலைவர் ராகேஷ், 2 ஆயிரம் தொண்டர்களோடு காங்கிரசில் சேர்ந்தார்.இவர் சிந்தியாவுடன் காங்கிரசில் இருந்து விலகிபாஜகவில் சேர்ந்தவர். சிவபுரியில் மிகுந்த செல்வாக்குள்ளவர்.போபாலில் நடந்த விழாவில் கமல்நாத் முன்னிலையில் தாய் கட்சியில் இணைந்த ராகேஷ் மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
‘’ நான் மீண்டும் சொந்த வீட்டுக்கு திரும்பியுள்ளேன்.இதுவரை என் உடல் பாஜகவில் இருந்தாலும், என் ஆன்மா காங்கிரசில் தான் இருந்தது. காங்கிரசில் இருந்து விலகியதற்காக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்,இனி சாகும் வரை காங்கிரசில் தான் இருப்பேன்’ என ராகேஷ் கண்ணீர் மல்க உருகினார்.
கர்நாடகத்தில் தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்துமுக்கிய நிர்வாகிகள் அணி அணியாக வெளியேறி, காங்கிரசில் சேர்ந்தனர்.அதே நிகழ்வு இப்போது மத்தியபிரதேசத்தில் அரங்கேறி வருகிறது.