மே.27
16வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஐபிஎல் கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
நடப்பாண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 16வது ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நுழைவதற்கான 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடத்தொடங்கிய மும்பை 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி குஜராத் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதைத் தொடர்ந்து, அகமதாபாத்தில் இன்று நடைபெறும் 16வது ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் குஜராத் அணி பலப்பரீட்சையில் ஈடுபடுகிறது. இதில் வெற்றிபெறும் அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும். இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறையும், குஜராத் டைட்டன்ஸ் ஒரு முறையும் ஐபிஎல் கோப்பையை வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் போட்டியில் கோப்பை வெல்லும் அணி எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இன்று நடைபெறும் போட்டியைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.