கொச்சி.. ஜுன்,-24. கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில சுமார் 10 முக்கிய யூ டியூப் வலைப்பதிவாளர்கள் மற்றும் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எர்ணாகுளம், பத்தனம்திட்டா திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆலுவாவில் உள்ள ஒரு நடிகை பியரால் மானியின் வீடும் அடக்கம்.
M4tech, Arjyou, Fishing Freaks, Unboxing Dude, Akhil NRD மற்றும் ஜெயராஜ் ஜி நாத் போன்ற யு டியூப் சேனல்களை நடத்துகிறவர்கள் வீடுகள் அலுவலகங்கள் சோதனைக்கு ஆளாகின.
இந்த சேனல்கள் பொழுதுபோக்கு, விளையாட்டு, உணவு தயாரிப்பு, வாழ்க்கை முறை, மீன்பிடித்தல் மற்றும் தொழில்நுட்ப-புதுமைகள் தொடர்பான காட்சிகளை வெளயிடுவதன் மூலம் பிரபலம் அடைந்தவை. மேலும் இந்த சேனல்கள் ஒவ்வொன்றிற்கும் 20 லட்சத்தில் இருந்து ஒரு கோடி வரை சந்தாதாரர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு சேனலின் வருமானமும் ஆண்டுக்கு சுமார் 2 கோடி ரூபாய் என்று வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். ஆனால இவ்வளவுத் தொகைக்கும் அவர்கள் வருமானவரிக் கட்டுவதில்லை என்பது புகாராகும்.
வியாழக்கிழமை காலை 9 மணியளவில் தொடங்கிய இந்த சோதனைகள், கொச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த யூ டியூபர்களில் சிலரின் வரி விவரங்களில் வெளி உலகத்திற்கு தெரியாத முதலீடுகள் இருப்பதாக அவர்கள் சந்தேகிக்கிறார்கள். யூ டியூபர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ள அதிகாரிகள் அவர்களது வங்கி பரிவர்த்தனைகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
வரும் நாட்களில் கண்காணிப்பில் உள்ள மேலும் சில யூடியூப் சேனல்களின் நிர்வாகிகள் வீடுகளிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
000