நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்பதை ஓசி பஸ் என்று அமைச்சர் பொன்முடி பேசியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின அதேபோன்று அமைச்சர் துரைமுருகன், கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் தருவதையும், இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் தரப்போவதையும் கிண்டலடித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டத்தில் காட்பாடியில் நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ’’கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறோம். அதை வைத்து மொபைல் போன் வாங்கலாம். யாரிடமாவது ரகசியமாக பேசலாம். யாரையாவது கூப்பிட்டு சினிமாவுக்கும் போகலாம் . அம்மாவுக்கும் ஆயிரம் ரூபாய் பொண்ணுக்கு ஆயுதம் ரூபாய்’’ என்று பேசியது பெண்களை முகம் சுளிக்க வைத்தது.
இது தொடர்பான வீடியோ வெளியாகி, அது வைரலாகி வருகிறது. ஒரு மூத்த அமைச்சர், தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி இப்படியா நடந்துகொள்வார்? என்று துரைமுருகனின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி நிர்மல்குமார் இது குறித்து, ‘’ஆயிரம் ரூபாய் கொடுத்து பசங்களோட ஊர் சுத்துங்க-னு சொல்றதுக்கு பெயர் என்ன தொழில் தெரியுமா ?’’என்று திமுகவை பார்த்து கேட்கிறார்.
மேலும், ‘’ஏழை மாணவிகள் படிப்பிற்கு கொடுக்கும் ஆயிரம் ரூபாயை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியுமா?’’என்று முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து கேட்கிறார்.
அமைச்சர்கள் பொன்முடி, கேகே. எஸ்எஸ். ராமச்சந்திரன், கே. என். நேரு உள்ளிட்டோரின் செய்கைகளால் , என் தூக்கத்தை ஏன் கெடுக்கிறீர்கள்? என்று வருத்தப்பட்டு இருந்தார் முதல்வர் ஸ்டாலின். கட்சியினரின் நடவடிக்கையால் இரவில் எனக்கு தூக்கம் இல்லை . மேடையில் கவனமாக பேசுங்கள் . வெளியில் நம்மை கண்காணிக்கும் கேமராக்கள் இயங்குகின்றன என்று முதல்வரும் எச்சரித்து பார்த்தார் . முதல்வர் வருத்தப்பட்டு சொன்னாலும் எச்சரித்து சொன்னாலும் திமுக அமைச்சர்கள் அதை கண்டு கொள்வதே இல்லை. அவர்கள் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி முதல்வரின் தூக்கத்தை கெடுக்கிறார்கள். பலரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றார்கள்.