செப்டம்பர்,14-
கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை பனையூரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
நிகழ்ச்சியை காண வந்த ரசிகர்களுக்கும், ரோட்டில் போய்க்கொண்டிருந்த பொது மக்களுக்கும் ஏற்பட்ட சங்கடங்களுக்கு வெறும் வார்த்தைகளால் ஒத்தடம் கொடுக்க முடியாது என்பதை ஏற்பாட்டாளர்கள் இன்னும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை.
கச்சேரி நடந்த அரங்கில் 25 ஆயிரம் பேர் மட்டுமே அமரமுடியும். ஆனால் 40 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றுள்ளனர். அளவுக்கு அதிகமான கூட்டம் அலை மோதியது.போலீசாரால் கூட்டத்தை சமாளிக்க இயலவில்லை.
50 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி வந்தவர்கள் போலீசாரால் விரட்டி அடிக்கப்பட்டனர்.உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில், வெளியே தப்பிச்செல்ல முயன்றனர்.ஆனால் கேட்டுகள் மூடப்பட்டிருந்தன.வெளியே செல்ல வழி இல்லை. பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மயங்கி விழுந்தனர்.
அரங்கில் கழிப்பறை,குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இல்லை. இருக்கை கிடைக்காமல் பெண்கள், முதியோர் அவஸ்தைக்கு ஆளானார்கள்.
கார் நிறுத்தும் வசதி இல்லாததால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து முடங்கியது. அந்த வழியாக வந்த முதலமைச்சர் ஸ்டாலின் கார், போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டது நிகழ்ச்சியை காண வந்தவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத திகில் அனுபவம் கிடைத்தது என்பதே உண்மை..
இந்த அவலங்கள், சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையான நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மன்னிப்பு கோரியுள்ளார். ஆனாலும் இதனை அரசியல் வாதிகளும், சினிமா பிரபலங்களும் சும்மா விடுவதாக இல்லை. அவர்கள் தங்கள் அறிக்கை கச்சேரியை ஆரம்பித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.
’’ ரஹ்மான் கச்சேரியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் ஒட்டு மொத்த தோல்வியால், பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்., கூட்ட நெரிசலில், பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது இந்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அண்ணாமலை.
இயக்குனர் தங்கர் பச்சான், தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இது: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அலைக்கழிக்கப்பட்டிருக்கும் மக்கள் கட்டுக்கடங்காத கோபத்தில் கிளர்ந்து எழுவதைக் காண முடிகிறது. தனிப்பட்ட முறையில் தங்களுக்கு சிக்கல் வந்தால் மட்டுமே கொதித்து எழும் மக்கள் பொது மக்களின் நலனுக்கான போராட்டங்களிலும் பங்கெடுக்க வேண்டும். இத்தகைய அறச்சீற்றம் பொதுப் போராட்டங்களிலும் உருவானால் அரசியல் கட்சிகளை மட்டுமே நாம் நம்பி இருக்கவேண்டியதில்லை’என்பது பச்சான் கருத்து.
ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். நடிகர் கார்த்தி விடுத்துள்ள அறிக்கையில்,’’ இசை நிகழ்ச்சியில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. என்னுடைய குடும்பமும் அந்த இசைநிகழ்ச்சியில் நடந்த குழப்பத்துக்கு மத்தியில் தான் இருந்தனர். ரஹ்மான் சார் அனைவருக்கும் எப்போதும் அன்பை வழங்கியதைப் போல ரசிகர்கள் அனைவரும் வெறுப்பை தாண்டி அன்பை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்”என குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் நேரடி இசை நிகழ்ச்சியை காண்பதற்காக கட்டுக்கடங்காமல் வந்த மக்கள் கூட்டத்தை கையாளாத நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தோல்வி இது. ரஹ்மான் எப்போதும் தன்னுடைய இசை, வார்த்தைகள், நடவடிக்கைகள் மூலம் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து வந்துள்ளார். நாம் அவருடன் உறுதுணையாக நிற்போம்’ என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
’சினிமா உலகம் ஏ.ஆர்.ரகுமானுக்கு உறுதுணையாக நிற்கும்’என இயக்குநர் பார்த்திபன் உறுதி அளித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்கள் வருத்தத்திற்குரியது. நடத்தியவர்களின் பொறுப்பு அது. ஏ.ஆர்.ரஹ்மான் தூய்மையான இனிய மனிதர்.. அவரின் மென்மையான மனமும் மேன்மையான குணமும் எனக்குத் தெரியும். நிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதத்திற்காக மனம்உடைந்திருப்பார். இனி இன்னும் கவனம் கொள்வார். அவருக்கு நான் மட்டுமல்ல இந்தத் திரையுலகமே துணை நிற்கும்.அவரின் இசையை தொடர்ந்துக் கொண்டாடுவோம் என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்
வசவுகள்,ஆதரவுகள் ஒரு புறம் இருக்க, இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இசைநிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனம், அனுபவம் இல்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக நியமித்ததும், இதனால் குளறுபடிகளும் ,கோளாறுகளும் ஏற்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே போலீஸ் விசாரணையில் மாட்டிக்கொண்டுள்ள ஏசிடிசி நிறுவனம் , கச்சேரியை பார்க்க இயலாதவர்களுக்கு காசை திருப்பி கொடுக்க முன் வந்துள்ளது. ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் ராஜா வீடியோ மூலம் வெளியிட்ட அறிக்கையில் ‘இந்த நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணம் 500 ரூபாயாக இருந்தாலும் 50 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் அவைதிருப்பி தரப்படும்’ என தெரிவித்துள்ளார்.
ஆனாலும் 20 ஆயிரம் பேர் அமரக்கூடிய இடத்திற்கு 43 ஆயிரம் டிக்கெட் கொடுத்ததாற்கான காரணம் மட்டும் இதுவரை வரவில்லை.
இவர்களின் செயலைப் பார்த்தால் கிடைத்தவரை லாபம் என்ற நோக்கத்தில் செயல்பட்டு இருப்பது புரிகிறது.
000