ஆகஸ்டு,30-
ஜெயிலர் மற்றும் லால் சலாம் படங்களில் நடித்து முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் இமயமலை பயணம் மேற்கொண்டார். தமிழகத்துக்கு திரும்பி வரும் வழியில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதிகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேசினார்.
ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் டைரக்ஷனில் அவர் நடிக்க உள்ளார். இன்னும் அந்த படத்தின் ஷுட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் அவர் பெங்களூருவில் உள்ள தனது அண்ணன் சத்யநாராயணாவை சந்திக்க சென்னையில் இருந்து கிளம்பிச்சென்றார். சந்தித்து பேசினார்.
சினிமாவில் நடிக்க வரும் முன்பு ரஜினி, பெங்களூர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்தவர்.இதனால் பெங்களூரு பயணத்தின் போது, தன்னுடன் வேலை பார்த்த நண்பர்களின் வீட்டிற்கு சென்று வருவார். இந்த முறையும் நண்பர்களை சந்தித்து உரையாடினார்.பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
திடீரென ரஜினிகாந்த், தான் பணியாற்றிய பெங்களூர், ஜெயநகர் பஸ் டெப்போவுக்கு புறப்பட்டு போனார். . அப்போது பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார். தாம் பணியாற்றிய நினைவலைகளை அவர்களிடம் பகிர்ந்து கொண்டார். பின்னர் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுடன் போட்டோ எடுத்து கொண்டார்.
பெங்களூருவில் உள்ள ராகவேந்திரா சுவாமி மடத்திற்கும் விசிட் அடித்து, தரிசனம் செய்தார் .
இந்த திடீர் பாசம் ஏன் என்பதுதான் தெரியவில்லை.
000