ஏ.வி.எம். ஹெரிடேஜ் மியூசியத்தை நடிகர் ரஜினி காந்த் பார்வையிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினார். மியூசியத்தில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ உபகரணங்கள் அவருடைய கவனத்தை மிகவும் ஈர்த்தன.
மேலும் முரட்டுக்காளை, எஜமான், சகலகலா வல்லவன், முந்தானை முடிச்சு, சம்சாரம் அது மின்சாரம் போன்ற முக்கியமான படங்களின் படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள், மோட்டார் பைக்குகள் மற்றும் கார்கள் ஆகியவற்றின் விவரங்களையும் ரஜினி காந்த் கேட்டு ரசித்தார்.
1983ல் தமிழில் வெளியான பாயும் புலி என்கிற படத்தில் தாம் ஓட்டிய சுசுகி RV 90, சிவப்பு நிற பழமை வாய்ந்த MG TB கார் ஆகியவையும் ரஜினிகாந்தை மிகவும் கவர்ந்தன.
மியூசியத்திற்கு வந்த ரஜினி காந்தை ஏவிஎம் சரவணன் மற்றும் ஏவிஎம் குழும நிர்வாகிகள் வரவேற்று அனைத்தையும் சுற்றிக் காட்டினார்கள்.
இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் பழமை வாய்ந்த நிறுவனங்களில் ஏவிஎம் முக்கியமானது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் ‘ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம்’என்ற அருங்காட்சியகம் அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.