‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் ‘அபூர்வ ராகங்கள்’படத்தில் அறிமுகமானாலும், அவரை தமிழகத்துக்கு அடையாளம் காட்டிய படம் ‘மூன்று முடிச்சு’ தான்.ரஜினியின் இரண்டாவது படமான இதனையும் கே.பாலச்சந்தரே இயக்கி இருந்தார்.
கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் ரஜினி வில்லனாக நடித்திருப்பார்.
இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, அனைத்து பாடல்களையும், கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் , ‘வசந்தகால நதிகளிலே’.ஏரி ஒன்றில் குட்டிப்படகில் அமர்ந்து கமலும், ஸ்ரீதேவியும் பயணிக்க ,ரஜினி , துடுப்பு போடுவார். பாடலை கமலும்,ஸ்ரீதேவியும் பாடுவார்கள்.
படகு, ரஜினியால் திட்டமிட்டு கவிழ்க்கப்படும். ஸ்ரீதேவியை அடைய ரஜினியின் , திட்டம் ,அது. தண்ணீருக்குள் மூழ்கிய கமல் , உயிருக்கு போராடுவார்.குயுக்தி கொண்ட ரஜினி, அந்த பாடலை தொடருவார்.
இந்த பாடலை ஜெயச்சந்திரனும், வாணி ஜெயராமும் இணைந்து கமல் –ஸ்ரீதேவிக்கு பாடியிருந்தார்கள்.ரஜினிக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியிருப்பார். வழக்கமான குரலாக இல்லாமல் வித்தியாசமான குரலில் பாட வேண்டும் என்று கே.பாலச்சந்தர் கூறியதால், எம்.எஸ்.வி தனது குரலை மாற்றி பாடினார்.
ரஜினி, தனது சினிமா வாழ்க்கையில் முதன் முதலாக வாயசைத்தப்பாடல், இது. 1976 ஆம் ஆண்டு மூன்று முடிச்சு வெளியானது.
இன்று பலரின் மனதை கவர்ந்த பாடலாக உள்ள ‘வசந்தகால நதிகளிலே’ பாடல், படம் வெளியான கால கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படவில்லை.படமும் , கூடத்தான்.
சிகரெட்டை லாவகமாக தூக்கிப்போட்டு, உதட்டில் பொருத்தும் ரஜினியின் ‘ஸ்டெய்ல்’ இந்த படத்தில் இருந்து தான் ஆரம்பமானது.
—