-‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்துக்கு பிடித்த ஒரே படம் ‘முள்ளும் மலரும்’.இந்த படத்தை தயாரித்த ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன் மரணம் அடைந்து விட்டார். அவருக்கு வயது 70.
ஆர்.சி.சக்தி இயக்கிய ‘சிறை’, பிரபு நடித்த ‘கலியுகம்’, ‘உத்தம புருஷன்’, ‘தர்மசீலன்’, ‘ராஜா கைய வெச்சா’, சத்யராஜ் நடித்த ‘பங்காளி’, ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சின்னக் கவுண்டர்’, பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, பிரபு நடித்த ‘பசும்பொன்’, எடிட்டர் பி.லெனின் இயக்கத்தில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த ‘நதியைத் தேடி வந்த கடல்’ ஆகிய படங்களையும் தயாரித்தவர், வி.நடராஜன்
கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவி ஜோதி, மகன்கள் செந்தில், விக்கி ஆகியோர் உள்ளனர்.
‘முள்ளும் மலரும்’படத்தில் இடம் பெற்ற அற்புதமான பாடல்,’செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்’.ஷோபாவை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு சரத்பாபு பாடுவார்.
‘இந்தப்பாடலை படமாக்க தன்னிடம் பணம் இல்லை’என நடராஜன் சொல்லி விட்டார்.கமலஹாசன் , தனது சொந்த காசை செலவழித்து அந்த பாடலை படமாக்க உதவினார்.
இதனை மகேந்திரன் பல முறை , ஊடகங்களில் சொல்லியுள்ளார். இதனை பலமுறை நடராஜன் மறுத்துள்ளார்.
இன்னொரு கொசுறு தகவல். ’பசும்பொன்’ படத்தின் கதை-வசன கர்த்தா –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான்.
*
—