ரஷ்யாவில் சிக்கிய பயணிகளுக்காக உணவு, அத்தியாவசியப் பொருட்களுடன் பறந்த விமானம்!

June 07, 23

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரஷ்யாவில் தறையிறக்கப்பட்ட விமானத்தால், அங்கு சிக்கித் தவிக்கும் பயணிகளை மீட்க உணவு, அத்தியாவசியப் பொருட்களுடன் மாற்று விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் அனுப்பியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய நகரங்களுக்கு இந்திய நகரங்களில் இருந்து நேரடியாக விமானங்கள் இயக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விமானத்தை ரஷ்யாவில் உள்ள மகடன் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கியுள்ளனர். இந்த விமானத்தில் மொத்தம் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, மகடன் விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் பயணிகளை தங்க வைக்க முயற்சிகளை மேற்கொண்ட பிறகு, மீதம் உள்ள பயணிகள் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டதாக ஏர் இந்தியா தெரிவித்தது.

மேலும், விமானத்தில் என்ன பிரச்சினை என்பதைக் கண்டறியவும், தேவையான சோதனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல அங்கே சிக்கியுள்ளவர்களைப் பாதுகாப்பாக அழைத்து வர மாற்று விமானத்தை தரையிறக்கவும் ஏர் இந்தியாவுக்கு அனுமதி வழங்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, பயணிகள் மற்றும் பணியாளர்களை மீட்க, ’மும்பையில் இருந்து மதியம் 1 மணியளவில் தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளுக்கு உட்பட்டு மாற்று விமானம் புறப்படும். மேலும் எங்கள் பயணிகளுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும்’ என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு என்றும் சுமுகமாக இருந்தது இல்லை. மேலும் உக்ரைன் போருக்குப் பின்னர் நிலைமை மிகவும் மோசமாகவே உள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டிய விமானம் திடீரென ரஷ்யாவுக்குச் சென்றதால் உள்ளே இருந்த பயணிகள் சற்று பதற்றமடைந்தனர். இருப்பினும், பைலட் எதற்காக விமானம் ரஷ்யாவுக்குச் செல்கிறது என்பதைத் தெளிவுபடுத்தியிருந்ததால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *