காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கச் செல்லும் வழியில் போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார்.
மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றடைந்த ராகுல் காந்தியை கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் பிஷ்னுப் பூர் என்ற இடத்தில் போலிசார் மறித்தார்கள். அவர்கள், “நீங்கள் சாலை வழியாக சென்றால் கையெறிக் குண்டுகள் வீசப்படும் அபாயம் உள்ளது. எனவே மேற்கொண்டு செல்ல வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டனர்.
இதற்குள் சாலை நெடுகிலும் ஏராளமான பெண்களும் காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்திக்கு ஆதரவாகத் திரண்டு விட்டனர். அவர்களை போலிசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைக்க நேரிட்டது, பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதனால் தடுத்து நிறுத்தப்ட்ட இடத்தில இருந்து ராகுல் காந்தி மீண்டும் சாலை வழியாக இம்பாலுக்கு திரும்பினார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தான் செல்ல திட்டமிட்டிருந்த சுராசந்த் பூருக்கு சென்றார். அங்கு முகாம்களில் தங்கி இருப்பவர்களை பார்த்து நிலைமை குறித்து கேட்டறிந்தார். ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார். இதனால் அவர் இம்பாலில் தங்கி விட்டு நாளையும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க இருக்கிறார்.
நாட்டின் முக்கியமான கட்சி ஒன்றின் தலைவர் சாலையில் பயணிக்க முடியாத அளவுக்கு மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.
கடந்த மே மாதம் மணிப்பூரில் இரு சமூக மக்களிடேயே மூண்ட கலவரத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இறந்துவிட்டனர். வீடுகளை இழந்த பல ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். போலிசுடன் இணைந்து ராணுவமும் பணியில் ஈடுபட்டுள்ள போதிலும் கலவரம் முழுமையாக ஓயவில்லை. இதனால் பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சர் பிரண் சிங் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டு வருகிறது.
000
000