காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்டட இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான அவருடைய மேல் முறையீட்டு மனுவையும் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தள்ளுபடி செய்து உள்ளார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
இது, மோடி என்ற பெயர் கொண்ட தமக்கு அவதூறு ஏற்படுத்திவிட்டதாக கூறி குஜராத் மாநில பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கை ராகுல் காந்தி மீது தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சூரத் பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட், ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவர் தமது எம்.பி.பதவியை இழந்தார்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி சூரத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடாந்து தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கேட்டிருந்தார். அவருக்கு ஜாமீன் வழங்கிய அந்த நீதிமன்றம் கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீது குஜராத் உயா்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்து இருந்தார். நாடே எதிர்பார்த்த தீர்ப்பை அவர் இன்று காலை 11 மணிக்கு அளித்தார்.
அவர், ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து விட்டார். மேலும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகால சிறைத் தண்டனைக்கு தடை விதிக்கவும் மறுத்து உள்ளார்.
இரண்டு சிறைத் தண்டனைக்கு தடை கோருவதற்கு ராகுல் காந்தி கோரும் காரணங்களை ஏற்கமுடியாது, மேலும் அவர் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்து உள்ளார்.
இந்த தீர்ப்பை அடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த வழக்கறிஞர்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளனர். குஜராத் உயர்நீதிமன்றம் சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டதால் குஜராத் உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல் முறையீடு செய்வது அல்லது உச்சநீதிமன்றத்தை நாடுவது குறித்து அவர்கள் விவாதித்து வருகின்றனர்.
நாடறிந்த அரசியல் தலைவரான ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு உள்ள சிறைத் தண்டனை பலரையும் அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.
000