தேர்தல் பிரசாரத்தின் போது மோடி குடும்ப பெயர் தொடர்பாக அவதூறாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதோடு தீர்ப்பை மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் மக்களவை எம்பி பதவி பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல் காந்தி தனக்கு வழங்கப்பட்டு இருந்த அரசு பங்களாவை காலி செய்தார். இதனிடையே இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதன்பின் ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று குஜராத் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. ராகுல் காந்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அவதூறு வழக்கில் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது என்று வாதாடினார். பின் இந்த வழக்கு விசாரணை மே 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.