ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் நடத்த உள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே நீ்ண்ட நாட்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பா.ஜ.க. அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு நடவடிக்கை எடுக்கக்கோரி சச்சின் பைலட் இன்று ஒரு நாள் உண்ணாவிரப் போராட்டம் நடத்த உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸின் இளம் தலைவரும், மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான சச்சின் பைலட்டின் செயல்பாடுகள் காங்கிரஸ் கட்சிக்குள் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. மேலும் அந்த கட்சிக்கு புது தலைவலியை கொடுத்துள்ளது. அதேசமயம் காங்கிரஸ் தலைமை முதல்வர் அசோக் கெலாட் ஆதரவாக இருப்பதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியது, மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பல புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது நம் நாட்டில் ஆளுகையில் மாநிலத்துக்கு தலைமை பதவியை அளித்துள்ளது. ராஜஸ்தானில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மாநிலத்தில் கட்சி அமைப்பின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டால் சாத்தியமான ஒரு சிறந்த வெற்றியாகும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த முக்கிய சாதனைகள் மற்றும் எங்கள் அமைப்பின் கூட்டு முயற்சிகளின் வலிமையின் அடிப்படையில் காங்கிரஸ் மக்களிடமிருந்து மீண்டும் ஆட்சியமைக்க ஆணையை கோரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.