ராணிப்பேட்டை அருகே சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரின் மேல் ஏறி விபத்துக்குள்ளானது. இதனால், அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடங்கியது.
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில் இன்று அதிகாலை சென்னை துறைமுக பகுதியிலிருந்து வெள்ளை ஜல்லிக்கற்கள் லோடு ஏற்றி கொண்டு வந்த கனரக லாரி ஒன்று பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி சென்னை- சித்தூர் தேசிய நெடுஞ்சாலை ஆட்டோ நகர் பகுதி அருகே வந்த பொழுது டிரைவர் தூங்கியதால்கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் கான்கிரீட் தடுப்புகளை உடைத்து, கொண்டு சில மீட்டர் தூரம் வரை சென்று மோதி நின்றது. இந்த விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த விபத்தில் லாரியின் முன் மற்றும் பின் பகுதியில் உள்ள டயர்கள் கழன்று சாலையில் கிடந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார், சாலையின் நடுவே கான்கிரீட் தடுப்பு சுவரில் ஏறி நின்ற லாரியை, பொக்லைன் இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்தினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்தால், அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.