ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் எதிரணி வேட்பாளர் கமல்ஹாசனா அல்லது தங்கம்.தென்னரசுவா?

தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது சகஜம்.

பாரம்பர்ய தொகுதியில் அதிருப்தி நிலவும் பட்சத்தில் அந்த தொகுதியில் போட்டியிடும்  தலைவர் ,பாதுகாப்பு கருதி இன்னொரு தொகுதியிலும் மனு செய்வார்.

அதற்கு உதாரணம் ,ராகுல்காந்தி.

குடும்பத்தொகுதியான அமேதியில் வெற்றி பெறுவது கடினம் என கணிப்புகள் சொன்னதால், கடந்த மக்களவை தேர்தலில் ராகுல்காந்தி அமேதி தவிர வயநாடு தொகுதியிலும் களம் இறங்கினார்.

நினைத்த மாதிரியே அமேதி, ராகுல் காலை வாரியது.வயநாட்டில் வென்றார்.

எந்த தொகுதியில் நின்றாலும் தன்னால் ஜெயிக்க முடியும் என தனது கம்பீரத்தை காட்ட இரு தொகுதிகளில் தலைவர்கள் நிற்பார்கள்.வாஜ்பாய், ஜெயலலிதா, என்.டி.ஆர். இதற்கான சான்று.

இப்போது பிரதமர் மோடி ,இந்துக்கள் அதிகமுள்ள வாரணாசி தொகுதி எம்.பி.யாக உள்ளார். இந்த சூழலில் கணிசமாக இஸ்லாமிய வாக்குகளை கொண்ட ராமநாதபுரம் தொகுதியில் களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்.

மோடி வெற்றி பெற்றால்,தென் மாநிலங்களில் பாஜக மீதான எதிர்மறையான பார்வையை மாற்றுவதோடு,தென் மாநிலங்களில் தங்கள் செல்வாக்கை நிலை நிறுத்தலாம் என்பது பாஜகவின் நம்பிக்கையாக உள்ளது.

வெற்றி வாய்ய்பு எப்படி?

ராமநாதபுரம் தொகுதியில் இதுவரை நடந்த 17 தேர்தல்களில் அதிக பட்சமாக  6 முறை காங்கிரஸ் வென்றுள்ளது.

மற்ற கட்சிகள் வென்ற விவரம்:

அதிமுக             4

திமுக                 3

தமாகா               1

பார்வர்டு பிளாக் 1

முஸ்லிம் லீக்        1

சுயேச்சை              1

முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள இந்த தொகுதியில் மூன்று முறை மட்டுமே முஸ்லிம் வேட்பாளர்கள் வாகை சூடியுள்ளனர்.

கடந்த தேர்தலில் தான் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி முதன் முறையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்டது. அந்த கட்சியின் வேட்பாளர் நவாஸ்கனியை திமுக, காங்கிரஸ், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.

முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 112 ஓட்டுகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை வீழ்த்தினார். அப்போது அ.தி.மு.க. பா.ம.க. தேமுதிக, புதிய தமிழகம், தமாகா ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணியில் இருந்தன.

இதே தொகுதியில் தனித்து களம் இறங்கிய டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 806 வாக்குகள் வாங்கினார்.நவாஸ்கனியின் ஓட்டு வித்தியாசத்தை விட இது, அதிகம். தினகரன், பாஜகவை ஆதரித்து இருந்தால் அந்த கட்சியின் நயினார் நாகேந்திரன் வென்றிருப்பார் என்கிறது,புள்ளிவிவரம்.

இந்த தொகுதியில் பிரதான கட்சிகளுக்கு உள்ள வாக்கு வங்கியை தெரிந்து கொள்ள 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் முடிவை பார்க்கலாம்.

2014 – தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் ஆகிய மூன்று முக்கியமான கட்சிகளும் தனித்தனியே நின்றன. பாஜக மட்டும் பாமக, மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளை சேர்த்துக்கொண்டு தனி அணியை உருவாக்கி இருந்தது.

இந்த தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்வர்ராஜா, திமுக வேட்பாளரை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 324 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திமுகவுக்கு இரண்டாம் இடம். மூன்றாம் இடத்தை பிடித்த

பாஜக ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 082 வாக்குகள் வாங்கியது..

காங்கிரஸ் வெறும் 62 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது.அந்த கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் எஸ்.திருநாவுக்கரசர்.

ராமநாதபுரம் தொகுதியில் கட்சிகளின் வாக்கு வங்கி நிலவரம் இதுதான்.ஜெயலலிதா இல்லாத சூழலில் அதிமுகவுக்கு எவ்வளவு ஓட்டுகள் இப்போது உள்ளது என தெரியவில்லை.

அ.தி.மு.க.வின் இரு அணிகள், மற்றும் தினகரனின் ஆதரவை பெற்று மோடியை வெற்றி அடைய ச்செய்து விடலாம் என்பது தமிழக பாஜகவின் கணக்கு.

ராமநாதபுரம் மக்களவை  தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி, திருவாடனை,ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி மொத்தமாக அள்ளியது குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை மோடி ராமநராதபுரத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக கூட்டணி வேட்பாளராக நடிகரும் மக்கள் நீதி மைய்யம் என்ற கட்சியின் நிறுவனருமான கமல்ஹாசனை நிறுத்த வேண்டும் என்றக் கருத்து அடிபட ஆரம்பித்து இருக்கிறது. அவரின் தந்தை சீனுவாசனின் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி. எனவே மண்ணின் மமைந்தர் என்ற அடையாளத்தோடு கமலை அங்கு நிறுத்தலாம் என்ற கருத்துப்  பகிரப்படுகிறது. அவரும் கடந்த ஓராண்டாக காங்கிரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் தென் சென்னை தொகுதியை குறிவைக்கும் கமலஹாசனுக்கு ராமநாதபுரம் பொருத்தமான தொகுதியாக இருக்கும் என்ற கருத்து உலா வர ஆரம்பித்து உள்ளது.

ஒரு வேலை கமலஹாசன் சம்மதிக்காவிட்டால் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசை நிறுத்த வேண்டும் என்பது சிலரின் விருப்பமாக உள்ளது. இவர் இப்போது திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தமிழக அமைச்சர்களில் எந்த சர்சையிலும் சிக்காதவர். துடிப்பாகவும் தெளிவாகவும் இருக்கிறார் என்பதும் இவர் மீதான மதிப்பீடாக உள்ளது. திமுக சார்பில் பாஜகவுக்கும் ஆளுநருக்கும் பதில் தரும் முக்கிய நிர்வாகியாகவும் தங்கம் தென்னசு இருக்கிறார்.

வேட்பாளர் யாராக இருந்தாலும் திமுக கூட்டணி இப்போதே ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பணியை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார்கள்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *