மக்களவை, மாநிலங்களவையில் காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை அமைக்க வலியுறுத்தியது, ராகுல் காந்தி எம்.பி பதவி பறிப்புக்கு கண்டனம் தெரிவித்தது ஆகியவற்றால், சுமார் இரண்டு வாரங்களாக அவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் இதுபோன்ற காரணங்களாலே இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதன் காரணமாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுமே, நாடாளுமன்ற இல்லத்திலிருந்து விஜய் சௌக்குக்கு `திரங்கா அணிவகுப்பு’ நடத்தின. அதைத் தொடர்ந்து கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டு செய்தியாளர் கூட்டத்தில், காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார்.அப்போது, “50 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பட்ஜெட் வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அவர்கள் (பா.ஜ.க), எதிர்க்கட்சிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று குற்றம்சாட்டிக்கொண்டு, நாடாளுமன்ற அவையைக் கலைக்கின்றனர். நாங்கள் கோரிக்கை வைத்தபோதெல்லாம் எங்களைப் பேச அனுமதிக்கவில்லை. என்னுடைய 52 ஆண்டுக்கால பொது வாழ்க்கையில் இதுவே முதன் முறை. இதற்கு முன்பு இதுபோன்ற சம்பவம் நடந்ததில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்துவிடுவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது. இத்தகைய அணுகுமுறையை நாங்கள் கண்டிக்கிறோம்.
இது இனியும் தொடர்ந்தால், ஜனநாயகம் முற்றிலுமாக ஒழிந்து சர்வாதிகாரத்தின் பிடியில் நாம் சிக்க வேண்டிவரும். பெரும்பான்மை உறுப்பினர்களைப் பெற்றிருக்கும்போதுகூட அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை அமைக்க நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள். மேலும், மக்களவை எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தி மின்னல் வேகத்தில் தகுதிநீக்கம் செய்யப்படும்போது, பா.ஜ.க எம்.பி ஒருவருக்கு குற்றவாளி என மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 16 நாள்களுக்குப் பிறகும் தகுதிநீக்கம் செய்யப்படவில்லை” என மல்லிகார்ஜுன கார்கே அடுக்கடுக்காக கேள்வியெழுப்பி குற்றம்சாட்டினார்.