டிசம்பர்-30,
சிக்கனமான பட்ஜெட்டில் தரமான சினிமாக்களை கொடுப்பதில் இந்தியாவில் முதன்மையாக விளங்குவது –மலையாள திரை உலகம்.
ஆனாலும்’மசாலா’ தயாரிக்கும் இந்தி, தெலுங்கு, தமிழ் படங்களே கல்லா கட்டுகின்றன. மலையாள திரை உலகம் ,பெரிய அளவில் சம்பாதிப்பதில்லை.
‘இந்த ஆண்டும் அப்படித்தான் என்று புலம்புகின்றனர் கேரள சினிமா தயாரிப்பாளர்கள்.
2024 ஆம் ஆண்டு மலையாள திரையுலகம் நல்ல படங்கள் கொடுத்தது . ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘ஆவேஷம்’, ‘பிரேமலு’, ‘வாழ’ என பல படங்கள் இந்தியளவில் பெரும் கவனத்தை ஈர்த்தன. இவற்றில் சில படங்கள் ரூ.100 கோடி வரை வசூல் செய்தது.
‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்டு மாபெரும் வசூல் சாதனை புரிந்தது.
இந்த நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், ஓர் அதிர்ச்சிக்குரிய தகவலை தெரிவித்துள்ளது.
மலையாளத்தில் 2024 ஆம் ஆண்டு வெளியான 199 படங்களில் 26 படங்கள் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றது – மொத்த படங்களின் தயாரிப்பு செலவான ரூ.1,000 கோடியில், ரூ.300 கோடி மட்டுமே லாபமாக வந்துள்ளது – ரூ.700 கோடி நஷ்டம் என தயாரிப்பாளர்கள் அங்கலாய்த்துள்ளனர்.
நஷ்டமடைந்த படங்களின் நடிகர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் தயாரிப்பாளர்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதிர்வை ஏற்படுத்தியுள்ளனர்.
காசு வேணுமா ? கால்ஷீட் வேணுமா? ன்னு தெளிவா சொன்னாத்தானே மம்முட்டி, மோகன்லால்களுக்கு புரியும்
—