ஜுன்,26-
’ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடலை பாடியதால் இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு வாய்ப்பு கொடுப்பதை நிறுத்திவிட்டதாக பாடகி மின்மினி தெரிவித்துள்ளார்.
1992ஆம் ஆண்டு வெளியான ‘மீரா’ படத்தின் மூலம் இளையராஜாவால் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாடகி மின்மினி. அதன் பிறகு ‘தேவர் மகன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாசறு பொன்னே வருக’ என்ற பாடலை பாடகி ஸ்வர்ணலதாவுடன் சேர்ந்து பாடியிருந்தார். 1992ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன ஆசை’ பாடல் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றது.
இந்த பாடலுக்குப் பிறகு இளையராஜாவிடம் பணிபுரியும் வாய்ப்பை இழந்துவிட்டதாக பாடகி மின்மினி சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். ஒரு பாடல் பதிவுக்காக ஸ்டுடியோவுக்கு வந்த தன்னை இளையராஜா, ‘நீ எதற்காக, எங்கெங்கோ சென்று பாடுகிறாய்? நீ இங்கே மட்டும் பாடினால் போதும்’ என்று கூறியதாகவும், இது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்ததாகவும் மின்மினி கூறியுள்ளார்.
மேலும் தான் அழுதபோது, அங்கு இருந்த பாடகர் மனோ தன்னை தேற்றி ஆறுதல் கூறியதாகவும் கூறியிருந்தார். அதன் பிறகு 1994ஆம் ஆண்டு இளையராஜா இசையில் வெளியான ‘கண்மணி’ படத்தில் ’உடல் தழுவ’ என்ற பாடலையும், 1995 ஆம் ஆண்டு வெளியான ‘பாட்டு வாத்தியார்’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ மாரி’ என்ற பாடலையும் மின்மினி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.