கருங்கல் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் நான்காவது நாளாக நீடிப்பதால் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகள் பாதி்க்கப்பட்டு உள்ளன
எனவே இவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து மீண்டும் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இது பற்றி சேலம் மாவட்ட கிரஷர் சங்க செயலாளர் ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது..
சேலம் மாவட்டத்தில் 75 கிரஷர் ஜல்லி குவாரிகள் உள்ளன. பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர். எங்களிடம் சமூக ஆர்வலர்கள் என சிலர் கூறிக்கொண்டு பணம் பறிக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் .அவர்கள் மீது காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கடந்த நான்கு நாட்களாக கிரசர் ஜல்லி உற்பத்தியை நிறுத்தி வேலை நிறுத்தம் செய்து வருகிறோம். கிரஷர் ஜல்லி குவாரிகளுக்கான அரசின் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. எங்கள் சங்க நிர்வாகிகளை அரசு பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும்.
சுரங்கங்களில் முன்பு போல இப்போது வெடி வைப்பதில்லை. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திதான ஜல்லிகளை உற்பத்தி செய்கிறோம். எங்களது வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஜல்லிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு சங்கச் செயலாளர் ராஜா பேட்டியில் கூறினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையில் குவாரி உரிமையாளர்களை வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
000