ஜுலை, 17-
சென்னையில அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்து உள்ளன. இது பற்றியும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது..
சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. காலையில் அமலாக்கத் துறை சோதனைக்காக வந்த போது வீட்டில் பொன்முடி, மனைவி, மருமகள் ஆகியோர் இருந்தனர். வீட்டில் நுழைந்த அதிகாரிகள் பொன்முடி உள்ளிட்டோரின் செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டனர்
அதன் பிறகு ஒவ்வொரு இடமாக சோதனை தொடங்கியது. பொன்முடி மற்றும் அவருடைய குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ய வங்கி அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
பொன்முடி வீடு மட்டுமின்றி அவருடைய மகனும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கொளதம் சிகாமணியின் விழுப்புரம் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வீட்டில் 2 பீரோக்களை அதற்கான சாவிகளை அதிகாரிகள் வாங்கி திறந்து சோதனை நடத்தினார்கள்.மற்றொரு லாக்கரை மட்டும் திறக்க முடியவில்லை. மாற்று சாவி தயாரிக்கும் தனபால் என்பவரை அழைத்து வந்து திறந்துப் பார்த்தனர்.
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்க துறையின் சோதனைக்கு காரணமான வழக்கு செம்மண் குவாரி வழக்காகும். ஏறக்குறைய 13 ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி பொன்முடி மகன் கவுதம சிகாமணி அண்மையில் உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரை விடுவிக்க மறுத்து, வழக்கை தொடர்ந்து நடத்தும் படி மாநில லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது. செம்மண் குவாரிகளில் இருந்து அளவுக்கு அதிகமாக மண் எடுத்த விவகாரத்தில் சட்ட விரோத பணப் பறிமாற்றம் நடைபெற்று இருக்கலாம் என்று அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது.
இந்த சோதனை திமுகவை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். பெங்களூரில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு செல்வதற்கு சென்னை விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
“பெங்களூருவில் இரண்டு நாட்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.இந்தக் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பாஜகவை வீழ்த்துவதற்காக பாட்னாவை தொடர்ந்து பெங்களூரில் கூட்டப்படும் கூட்டம் பாஜக ஆட்சிக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. அதனுடைய வெளிப்பாடுதான் அமலாக்கத்துறையின் சோதனைகள். இது குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை.
அமலாக்கத் துறை சோதனைக்கு காரணமான செமமண் குவாரி வழக்கு13 ஆண்டு காலத்திற்கு முன்பு ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் இருந்தபோது புனையப்பட்டதாகும். வழக்கு தொடரப்பட்ட பிறகு 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் இருந்தது. அப்போது விட்டுவிட்டு இப்போது விசாரணை செய்கிறார்கள். ஏற்கனவே அவர் மீது தொடுக்கப்பட்டு உள்ள வழக்குகளில் இரண்டு வழக்குகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எது எப்படி இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட இருக்கிறார்கள். இதுதான் உண்மை.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை மேற்கொண்டு உள்ள சோதனைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தங்கள் பாதுகாப்புக்க மத்திய ரிசர்வ் போலிசாரை அழைத்து வந்திருந்தனர். சோதனை நடைபெறும் தகவல் பரவியதும் திமுகவினர் பொன்முடி வீட்டின் முன் கூடினர்கள். கரூரில் கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது அதிகாரிகள் சிலர் திமுகவினரால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அதனால் பொன்முடி வீட்டு சோதனையில் பாதுகாப்பு பலமாகாவே இருக்கிறது.
000