ஜுன், 29- தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆறு நாள் லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு காலையில் சென்னை திரும்பிய போது விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது..
இந்திய பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் லண்டனில் நடைபெற்றது. அதில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இங்கிலாந்து முழுவதுமே பிரதமர் மோடியின் ஆட்சியில்அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா எப்படி மாறப்போகிறது என்பது குறித்து தான் அதிகம் பேசுகின்றனர். இதனை ஒரு இந்தியனாக ஒரு தமிழனாக கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா எடுத்துள்ள முடிவு, இந்தியா செய்துள்ள உதவி ஆகியவற்றை பிரிட்டனில் இருக்கக்கூடியவர்கள் மிகவும் பாராட்டுகிறார்கள். இலங்கையின் 1987, Amendment article 13 ஒப்பந்தத்தின் படி தமிழர் பிரச்சினையை பிரதமர் மோடி நிச்சயம் செய்து முடிப்பார், தமது காலத்தில் பிரச்சனை முடிந்து மீண்டும் இலங்கைக்கு திரும்பக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகிறது..
இலங்கையில் இருந்து சென்ற தமிழர்களும், தமிழ்நாட்டில் இருந்து சென்ற தமிழர்களும் சைவ கோவில்களை கட்டி வழிபட்டு வருகிறார்கள். அந்த கோவில்களுக்கும், பர்மிங்காம்மில் உள்ள மிகப்பெரிய பெருமாள் கோவிலுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இதனை பார்க்கும் போது சனாதன தர்மம் கடல் தாண்டி விரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சிதம்பரம் கோயில் இருக்கக் கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆனால் திமுக அரசு சிதம்பரம் கோயிலினை ஏதோ ஒரு காரணத்திற்காக தொடர்ந்து செய்திகளில் அடிபட வைத்துக்கொண்டே இருக்கிறது. இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் சிதம்பரம் கோவிலுக்கு செல்வதற்கு உரிமை உண்டு. ஆனால் அவர்களுக்கு எந்த வகையான உரிமை உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் உண்டியல் பிரச்சனை, ஆறு கால பூஜைகள் நடைபெறாத பிரச்சனை என்று பல பிரச்சினைகள் உள்ளது. இவற்றை கவனிக்காமல் சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்களிடம் பிரச்சினை செய்வதே திமுக அரசின் வாடிக்கையாக உள்ளது.
தமிழ்நாடு பாஜகவின் “என் மண், என் மக்கள்” நடை பயணத்தின் தொடக்க நிகழ்விற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருவதாக தெரிவித்துள்ளார். அந்தப் பயணம் தொடங்குவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படு்ம்.
இவ்வாறு அண்ணாமலை பேட்டியில் கூறினார்.
பேட்டியின் போது செய்தியாளர் ஒருவர், அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பியை, ரகசியமாக லண்டனில் சந்திதித்தாக கூறப்படுகிறதே என்று ஒரு கேள்வியை எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த அண்ணாலை, “எட்டாவது படிக்கிற பையன் மாதிரி, ரோட்ல டீ குடிக்கிறவங்க மாதிரி, முட்டாள் தனமாக கேள்வி கேட்காதீங்க” என்று கோபமாக பதிலளித்தார்.