ஜுலை, 5- தேவர்மகன் படத்தை அடுத்து கமல்ஹாசன் சண்டியர் எனும் தலைப்பில் புதிய படம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார்.சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் தலைப்பை விருமாண்டி என மாற்றி , படத்தை உருவாக்கி வெற்றி கண்டார்.
இதனை தொடர்ந்து அவர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட படம், வேட்டையாடு விளையாடு. சென்னையில் பார்க் ஷெரட்டன் ஓட்டலில் நடந்த பட தொடக்கவிழாவில் கமல் படத்தின் தலைப்பை ரொம்பவும் சிலாகித்தார். ’இந்த டைட்டிலுக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது’ என குறிப்பிட்டார்.
2006-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படம் கமலின் திரைஉலக வாழ்விலும் ஒரு முக்கிய படமாக அமைந்தது. இந்தப்படத்துக்காக தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்டடித்தன. தமிழ் சினிமாவின் முக்கிய க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இந்தப்படம் ரீமாஸ்டர் செய்யப்பட்டு ஜூன்- 23 ஆம் தேதி மறு வெளியீடு செய்யப்பட்டது. வெளியான திரையரங்குகளில் எல்லாம் வசூல் குவித்து வருகிறது வேட்டையாடு விளையாடு.
புதிய திரைப்படங்கள் பல ரிலீஸ் செய்யப்பட்டபோதும் அந்தப் படங்களைத் தாண்டிய வரவேற்பு ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கு கிடைத்து வருகிறது. இதன் வெற்றி, மேலும் சில கமல் படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யும் ஆவலை ,அந்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு உருவாக்கியுள்ளது.
பஞ்ச தந்திரம் தயாரிப்பாளர் ஏ.எல்.தேனப்பன், அந்தப்படத்தை தூசு தட்டி மறு வெளியீட்டுக்கு தயார் படுத்தி வருகிறார்.
- வேந்தன்.
000