செப்டம்பர்,01-
கடந்த 90- ஆம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த வடிவேலு விறு விறுவென முன்னேறி கவுண்டமணியையே கவிழ்த்து விட்டு நம்பர் 1 நகைச்சுவை நடிகர் ஆனார்.
பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், ஷங்கர் ஆகியோரால் செதுக்கப்பட்ட அவர் ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’படத்தில் கதாநாயகனாக நடித்தார்.ஷங்கர் தயாரித்த இந்தப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.
இதன் பின் ஹீரோவாக நடிக்கவே வடிவேலு ஆசைப்பட்டார். இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன்,எலி என அவர் நாயகனாக நடித்த படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்தன.அவருக்கு ஒரு ‘பிரேக்’ அளிக்கும் வகையில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முன்வந்தார், ஷங்கர். படத்துக்கு ‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ என டைட்டில் வைக்கப்பட்டது.முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே, இரண்டாம் பாகத்தயையும் டைரக்ட் செய்தார். ஷுட்டிங் ஆரம்பித்த முதல்நாளில் இருந்து வடிவேலு கொடுத்த இம்சைகளால் படத்தை ‘டிராப்’ செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்பட்டார் ஷங்கர்.இது குறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் வடிவேலு நஷ்டஈடு வழங்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அளித்தது. அவர் மறுத்தார்.இதனால் படங்களில் நடிக்க வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை போட்டது.ஏழெட்டு ஆண்டுகள் நடிக்காமல் வீட்டிலேயே பொழுதை கழித்தார், நகைச்சுவைபுயல்.
லைகா நிறுவனம் வடிவேலுவை மீட்டு வெளியே கொண்டு வந்தது.ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுத்த லைகா ,தங்கள் தயாரிப்பில், வடிவேலுவை ஹீரோவாக வைத்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தை தயாரித்தது.படம் ‘அட்டர் பிளாப்’.
உதயநிதி தயாரித்து, நடித்த மாமன்னன் படத்தில் வடிவேலுவுக்கு கனமான கேரக்டர் கொடுக்கப்பட்டது. படம் மாபெறும் வெற்றி பெற்றது.இதனால் வடிவேலு மீண்டும் முருங்கை மரம் ஏற ஆரம்பித்து விட்டார். மாமன்னன் படத்தில் நடிக்க 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய வடிவேலு இப்போது, புதிய படங்களில் நடிக்க 5 கோடி ரூபாய் கேட்கிறார்.சந்திரமுகி இரண்டாம் பாகம் ஜெயித்தால்,ஊதியத்தை மேலும் சில கோடிகள் உயர்த்த திட்டமாம்.
‘’ஓடி ஓடி உழைக்கணும்.. கோடி கோடி குவிக்கணும்’ என்பதே வடிவேலுவின் பாலிசி?
000