ஜூன் – 27
மத்தியப்பிரதேச மாநிலத்தில் 5 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் இயக்கப்படும் வந்தே பாரத் மொத்த ரயில்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
உள்நாட்டிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வந்தே பாரத்
எக்ஸ்பிரஸ் ரயில்கள், சதாப்தி எக்ஸ்பிரஸை போல அதிவேகமாக செயல்படும் ரயில் சேவையாகும். இந்த வந்தே பாரத் ரயில்களை இப்போதைய பாரத பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தாலும், இதற்கெல்லாம் விதை என்னவோ நேரு போட்டது என்று தான் சொல்ல வேண்டும்…
இதனை பற்றி தெரிந்து கொள்ள, முதலில் வந்தே பாரத் ரயில்களுக்கும் , தமிழ்நாட்டில் உள்ள ஒரு பகுதிக்குமான தொடர்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்….
ஆம், வந்தே பாரத் ரயில்கள் என்பது சென்னையின் புறநகர்ப் பகுதி, பெரம்பூரில் இயங்கி வரும் ஐ.சி.எப் தொழிற்சாலையிலேயே முழுக்க முழுக்க தயாரிக்கப்படுகின்றன. சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலை சுதந்திர இந்தியாவின் ஆரம்பகால உற்பத்தி அலகுகளில் ஒன்றாகும். இது இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் அக்டோபர் 2, 1955 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்திய ரயில்வே பயணிகளின், ரயில் பெட்டிகள் உற்பத்தியில் ஒரு முதன்மையான உற்பத்தி பிரிவாக உள்ள இந்த ஐ.சி.எப் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலைக்கு அடித்தளமிட்டவர் நேரு தான்… இங்கு தயாரிக்கப்படும் பெட்டிகள் பெரும்பாலும் இந்திய இரயில்வேக்கே சென்றாலும் , வெளிநாட்டு தொடர்வண்டி நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. தாய்லாந்து, பர்மா, தைவான், சாம்பியா,பிலிப்பைன்ஸ், தான்சானியா, உகாண்டா, வியட்நாம், நைஜீரியா, மொசாம்பிக் மற்றும் பங்களாதேசம் ஆகிய நாடுகளுக்கும் பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
சென்னை ICF இல் தற்போது 7000- க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்தாலும், பிரமாண்ட வந்தே பாரத் ரயிலை தயாரிப்புக்கென்றே பிரத்யேக ஒரு தனி யூனிட் செயல்படுகிறது. பயோ-வாக்யூம் டாய்லெட்டுகள், வைஃபை ஆன்போர்டு, முழு தானியங்கி கதவுகள், CCTV கேமரா போன்ற பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ள வந்தே பாரத் ரயில்கள் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கோச் தொழிற்சாலையில் (Integral Coach Factory) சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலை தயாரித்து முடிக்க கிட்டத்தட்ட 2 முதல் 3 மாதங்கள் வரை தற்போது ஆகிறது..
ஐ.சி.எப் தொழிற்சாலை, வந்தே பாரத் ரயில்கள் மூலம், இந்திய ரயில்வேக்கு ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை….