கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது.
திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். தாயின் பராமரிப்பில் இருந்த குட்டி யானை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றதால், குட்டி யானைக்கு மருத்துவ உதவி செய்ய முடியாமல் வனத்துறையினர் திணறிவந்தனர்.
நீண்ட நாட்களுக்கு பிறகு, அதிரப்பள்ளி வனப்பகுதியில் குட்டி யானையின் தாய் உள்ளிட்ட யானைகள் கூட்டத்துடன் இணைந்து அந்தக் குட்டி யானை வந்தது. இதை அப்பகுதி வனத்துறையினர் புகைப்படம் எடுத்து குட்டியானையில் உடல் ஆரோக்கியத்தை ஆய்வு செய்து வருகின்றனர். குட்டியானை ஆற்றில் தண்ணீர் குடிக்கும் பொழுது முதலை கடித்து இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். மேலும், தும்பிக்கையில்லாத அந்த குட்டி யானையின் உடல்நலம் நன்றாக உள்ளதாக கேரளா வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.