ஏப்ரல்.25
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பெய்த கனமழையால் கூலாங்கல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக பிற்பகல் நேரங்களில் எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், நேற்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது. பிற்பகலுக்குப் பின்பு வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் சின்னக்கல்லார், சிங்கோனா, போன்ற வன பகுதிகளிலும் கன மழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ மழை பதிவானது. அதிக மழையால் கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது, வால்பாறை பகுதியில் மழை இல்லாத நிலையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதிக தண்ணீர் வந்ததால் ஆற்றிலிருந்து வெளியேற முடியாமல் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், வெள்ளத்தில் சிக்கித்தவித்த சுற்றுலாப் பயணிகளை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.