தமிழ் நாட்டைச் சேர்ந்த குறவர் இன பெண்களை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி பாலியல் வன்கொடுமை செய்து பிறப்பு உறுப்பில் மிளகாய்த் தூள் தடவிஆந்திர போலீசார் வெறித்தனமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்து உள்ளது.
இந்த கொடூரச் செயலை செய்த ஆந்திரா காவல் துறையினருக்கு தமிழ்நாடு காவல்துறையினர் உடந்தை என்பது புகார் ஆகும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலியாண்டபட்டி கிராமத்ததில் வசிக்கும் குறவர் இன மக்களில் சிலர் சென்னை வந்து டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரில் இந்த குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர்.
புகார் கொடுத்த பிறகு செய்தியாளர்களிடம் பூமதி என்ற பெண் கூறியதாவது..
கடந்த ஜூன் மாதம் 11 -ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் போலீசார் தனது கணவரான வைரமுத்து என்பவரை திருட்டு வழக்கில் தேடி கிராமத்திற்கு வந்தனர். அவர்களிடம் கணவர் கூலி வேலைாக்காக கேரளா சென்றிருப்பதாக கூறினேன்.
அதனால், என்னையும் மாமியாரையும் 11-ம் தேதி இரவே சித்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று திருடியதை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து சித்திரவதை செய்தனர். என்னை, ஆண் காவலர்கள் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து ரசித்ததார்கள். திருட்டை ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் கூறி மிரட்டினார்கள்.
லத்தியால் என் பின்புறத்தில் அடித்தார்கள். அவர்களிடம் ஒத்துழைப்பதாக இருந்தால் என் கணவரை உயிரோடு விட்டு விடுவேன் என்று மிரட்டி ஜாதியைப் பற்றி இழிவாக பேசினார்கள்.
இரும்புக் கம்பியை எடுத்து வந்து, அதில் மிளகாய்போடி தூவி, நான் வீட்டுக்கு தூரம் என்றுகூடப் பார்க்காமல் பிறப்புறுப்பில் வைத்துவிட்டார்கள் . அவர்கள் செய்த பாலியல் சித்ரவதைகளைத் தாங்க முடியாமல், செத்துப் போகலாம் என்று முயற்சித்தேன். ஆனால், எல்லா நேரமும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் கூடவே இருந்ததால், எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
திருட்டு சம்பவம் பற்றி எனக்குத் தெரியாது என்று அழுத போதிலும் போலீசார் என்னை ராட்டினத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்ததார்கள். பின்னர் நான்கைந்து போலீசார் என்னைப் பிடித்துக் கொள்ள ஆடைகளை அவிழ்த்து பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தேய்த்து கொடுமை செய்தார்கள். அதன் பிறகு சிறையில் அடைத்துவிட்டனர்.
என்னை மட்டுமல்லாமல் எனது கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பெண்களையும் இதே போன்று காவல் நிலையம் அழைத்துச் சென்று ஆந்திர போலீசார் நிர்வாணப்படுத்தி அடித்து திருட்டு வழக்குகளை ஒப்புக் கொள்ளுமாறு கொடுமைப் படுத்தினார்கள்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட போலீசாரிடம் புகார் கொடுத்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் ஆந்திர போலீசாருக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியை கவனித்தால் மணிப்பூரைப் போல இதுவும் கொடுமையான செயல்தான். ஆந்திர போலிஸ் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறதோ.