விசிக தலைவர் திருமாவளவன், இனியாவது அதிமுக விழித்துக்கொள்ள வேண்டும், பாஜக உடனான கூட்டணியை அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பரிசீலனை செய்ய வேண்டும். கர்நாடக தேர்தல் முடிவுகள் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னறிவிப்பாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், “கர்நாடக தேர்தல் முடிவுகளால் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது, சவாலாக இருக்காது. தேர்தல்களில் நிறைய முறை திராவிடத்தையும் மக்கள் புறக்கணித்துள்ளானர். சமூக நீதிக்கு எதிரான திமுக கூட்டணியைவிட்டு பாஜக கூட்டணிக்கு திருமாவளவன் வரவேண்டும். திமுக கூட்டணியில் பட்டியலின மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பதை திருமாவளவன் உணர்ந்துள்ளார்.
திமுகவால் எந்த பட்டியல் இன பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியவில்லை. அப்படி இருக்கையில் திருமாவளவன் எதற்கு அங்கு உள்ளார். வாரிசு அரசியல், குடும்ப அரசியல்தான் திராவிடமாடல் என்பதை நிரூபிக்கின்றனர். தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து, சரி செய்ய முயற்சிப்போம். சிடி ரவி தோல்வியுற்றதால் தமிழ்நாட்டை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது. சொந்த தொகுதியில் தோற்றுப்போக பல காரணங்கள் உள்ளன. அண்ணாமலை அவரது பங்கை சிறப்பாக செய்துள்ளார். ஆனால் மக்கள் காங்கிரஸ்க்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி இல்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைத்தனர். மீண்டும் அவர்கள் பாஜகவுக்கு தான் வாய்ப்பளிப்பார்கள். இது 100 சதவீதம் உறுதி” என்றார்.